Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » 21 வருடங்களின் பின்னர் கீரிமலை-தொண்டமானாறுப் பகுதிக் கடலில் மீன்பிடிக்க அனுமதி

21 வருடங்களின் பின்னர் கீரிமலையில் இருந்து தொண்டமானாறு வரையிலான 13 கிலோமீற்றர் நீளமான கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மற்றும் அடுத்த நிலைத் தளபதிகளுக்கும், யாழ்.மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. குடாநாட்டில் மீளக் குடியமராது இருக்கும் மக்களின் பிரச்சினை குறித்து இதில் ஆராயப்பட்டது.

கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த யாழ்.அரச அதிபர் இமெல்டா,யாழ். மாவட்டத்தின் கடற்பிரதேசம் முழுவதிலும் மீன் பிடிப்பதற்கான அனுமதி நேற்றுமுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை காலமும் கடல்தொழில் தடை செய்யப்பட்டிருந்த, கீரிமலை முதல் தொண்டமானாறு வரையான கடலிலும் மீனவர்கள் தொழில் செய்ய முடியும் என்றார்.

இந்தத் தடைநீக்கம் மூலம் கீரிமலை, காங்கேசன்துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி, தொண்டமானாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் இனித் தடையின்றித் தமது கடற்பரப்பில் தொழில் செய்ய முடியும். போர் காரணமாக 90 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவே இருந்து வந்தன.1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் மொத்த மீன்பிடியில் மூன்றிலொரு பங்கு, தற்போது விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டது. மயிலிட்டித் துறைமுகம் அதில் முக்கிய பங்கை வகித்தது.

இந்தப் பகுதிகளில் இருந்து இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக 90 ஆம் ஆண்டு மக்கள் வெளியேறினர். இன்னும் மயிலிட்டி, காங்கேசன்துறை , பலாலி பகுதிகளில் மீள்குடியமர்வு சாத்தியப்படவில்லை. இராணுவம் இதற்கான அனுமதியை வழங்கவில்லை.மயிலிட்டியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் மல்லாகத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். ஏனையோர் வேறு இடங்களிலும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com