Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » ஹெரோயின் பாவனையில் நகரப் பாடசாலை மாணவர்;அதிரடி நடவடிக்கையில் ஒருவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தினார்கள் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா தெரிவித்தார்.

இவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

யாழ். நகரில் மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் பயன்பாடு குறித்த தகவல் கல்விச் சமூகத்தைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் ஒரே சொத்தான கல்வியை அடியோடு பாழாக்கி விடக்கூடிய இந்தப் பழக்கத்தைத் தடுக்க உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று கல்விச் சமூகத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பாடசாலை மாணவன் ஒருவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையில் பல மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மாணவர்களுக்கு ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முதலில் சிக்கிய மாணவனை விசாரணை வளையத்துக்குள் இறுக்கியதன் மூலம் போதைப் பாவனையில் ஈடுபட்ட அவனது நண்பர்களின் விவரத்தைப் பொலிஸார் பெற்றுக் கொண்டனர். அவர்களும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாடசாலைகளில் கற்கும் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களே பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் 14 வயதேயானவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வழங்கிய தகவல்களில் இருந்து, யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப் பொருள்களை விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றைப் பொலிஸார் அடையாளப்படுத்தினர். நேற்றுக் காலையில் இருந்து மாலை வரை அவர்கள் நடத்திய அதிரடி நடவடிக்கை மூலம் அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மூலம் போதைப் பொருள் விற்கும் கும்பலை மடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அவர் உத்தரவிட்டார். பரிசோதனைகளின் பின்னர் பெற்றோர் அழைக்கப்பட்டு, எச்சரிக்கை செய்யப்பட்டு மாணவர்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். எனினும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு அவர்களை உளவள ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.

இந்த மாணவர்களில் அனேகமானோர் ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களின் பிள்ளைகள் என்றும் அறியவந்துள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கை அவசர, அவசிய தேவை

மாணவர்களிடம் பரவிவரும் இந்தப் போதைப் பொருள் பாவனையைத் தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசர, அவசிய தேவையாக உள்ளது என்று யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

“யாழ்ப்பாண மக்களின் சொத்தான கல்வியை அழிப்பதற்காகவே மாணவர்களைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்குகிறார்கள். இதனைத் தடுப்பதற்கு பொது நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார் யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறைத் தலைவர் வி.பி.சிவநாதன்.

“நாங்கள் எமது சமூதாயத்தை இந்தப் போதைப் பொருள் பாவனையில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து, கிராம மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார், வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அதிகாரியும் “ஆறுதல்’ தொண்டு நிறுவனப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா.

இது தொடர்பில் விரிவுரையாளர் வி.பி.சிவாதன் மேலும் தெரிவித்ததாவது:
மாணவர்களிடம் போதைப் பொருள் பாவனை என்பதை சமூகத்தை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே நோக்க வேண்டும். பாடசாலைச் சமூகத்தைப் பொறுத்த வரையில் அதிலும் யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்வித் தரத்தை வீழ்த்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் எமது கல்விச் சந்ததி இல்லாமல் போய்விடும் என்றே சொல்லலாம். இதனைத் தடுப்பதற்கு முதலில் பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும். பாடசாலைகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். களியாட்டங்கள் நடக்கும் இடமாகப் பாடசாலைகள் மாறிவிட்ட துரதிஷ்டமும் இந்த மண்ணில் இப்போது நடந்தேறுகின்றது. அவற்றைத் தவிர்த்து மாணவர்களின் நடத்தையில் பாடசாலைகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முன்னாள் கல்வி அதிகாரி டிவகலாலா மேலும் தெரிவித்ததாவது:
எமது சமூகம் தற்போது பலவிதமான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்தப் போதைப் பொருள் பாவனை. யாழ்ப்பாணத்தில் முன்னர் இல்லாத இத்தகைய பழக்கங்கள் இப்போது எப்படி வந்தன? ஏன் வந்தன? எங்கிருந்து வருகின்றன? என்பதை ஆராய வேண்டும்.

போதைப் பொருளுக்கு இளம் சமூகம் அடிமையாகிவிட்டால் அதனைப் பாதுகாப்பது கடினம். முழுச் சமூகமும் இது குறித்து உரத்துச் சிந்திக்க வேண்டும். இது தொடர்பில் கிராமங்கள் தோறும் சென்று பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாகத் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சகல பாடசாலைகளிலும் நேரம் ஒதுக்கி, போதைப் பொருள் பாவனையின் கேடுகள் பற்றியும் துஷ்பிரயோகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.

– உதயன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com