Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வேலணையில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

வேலணை பெருங்குளம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பத்துப் பிள்ளைகளின் தந்தையான சவரிமுத்து யேசுராசா (வயது 58) என்பவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இண்டாவது மனைவி சஞ்சனாதேவி (வயது 43) கையிலும் முகத்திலும், மகன் முகுந்தன் (வயது 18) கழுத்துப் பகுதியிலும் வெட்டுக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் கூறப்படுவதாவது:

நேற்று மாலை 6 மணிக்கு தனது சீவல் தொழிலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய யேசுராஜா இரவு படுக்கைக்குச் சென்றார். அவரது மனைவி, பிள்ளைகளும் படுத்து உறங்கி விட்டனர். பின்னர் நள்ளிரவில் திடீரென தாயார் அலறும் சத்தம் கேட்டுத் தாங்கள் எழும்பியதாகவும் அப்போது தமது தந்தையார் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டதாகவும் தாயாரும் சகோதரரும் காயங்களுடன் அழுது கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் வந்ததாகவும் இறந்தவரின் மகளான முகுந்தினி (வயது 13), மகனான சயந்தன் (வயது 11) ஆகியோர் தெரிவித்தனர்.

பின்னர் சத்தங்கேட்டு அயலில் உள்ளவர்கள் வந்ததைத் தொடர்ந்து தாயாரையும் சகோதரரையும் ஓட்டோ ஒன்றில் வேலணை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் கூறினார்.

இறந்த யேசுராஜாவின் முதல் மனைவி பிரான்சிஸ்கா (வயது 56) விசாரணைகளின் போது தமது கணவருடன் தான் மட்டும் கதைப்பதில்லை எனவும், பிள்ளைகள் அடிக்கடி அவரைச் சென்று பார்த்து வருவதாகவும் அவரும் தமது வீட்டுக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்ட ஊர்காவற்றுறை மாவட்ட நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா சம்பவம் நடைபெற்ற இடத்தையும் அயலில் உள்ள வளவில் காணப்பட்ட கள் வைக்கும் பாத்திரம் இருந்த பகுதிகளையும் பார்வையிட்டார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை செய்த நீதிவான் பிரேதப் பரிசோதனைக்காக இறந்தவரின் உடலையும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறும், பூரண விசாரணைகளை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் ஊர்காவற்றுறை பொலிஸ் பரிசோதகர் டீ.த.சில்வா குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சார்ஜன் வெ.நந்தகுமார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com