Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் நிதி உதவியுடன் மூன்று மாடிக்கட்டடம்

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று 9.30 மணிக்கு இடம்பெறுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜப்பானிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளனர். இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

இலங்கை அரசு மற்றும் ஜப்பான் அரசு என்பவற்றுக்கிடையில் காணப்படும் நட்புறவு பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசினால் வழங்கப்பட்ட ரூபாய் 2900 மில்லியன் நன்கொடையினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மத்திய தொழிற்பாட்டை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் புதிய மூன்று மாடிக் கட்டிடத் தொகுதியின் நிர்மாணங்கள் ஆரம்பமாகின்றன.

இதற்கான ஆயத்த நடவடிக்கைகளுக்காகப் பழைய பாவிக்க முடியாத கட்டடங்கள் அகற்றப்பட்டுப் புதிய இடங்களுக்கு விடுதிகள் மற்றும் வைத்தியசாலைப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்பட்டுப் புதிய நடைமுறை முன்னமே அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்புதிய மூன்று மாடிக் கட்டடம் யாழ். போதனா வைத்தியசாலையின் மத்திய தொழிற்பாட்டை மேம்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைவாக 6 ஆயிரத்து 870 சதுர மீற்றர் பரப்பைக் கொண்டதாக அமையவுள்ளது.

இது மக்களின் வைத்திய தேவைகளைத் திட்டமிட்டுத் தடங்கல்களின்றிச் சிறப்புடன் நடத்த பயன்படுத்தப்படவுள்ளதால் இது யாழ்.மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவுள்ளது. இதன் அடித்தளம் 2 ஆயிரத்து 370 சதுர மீற்றர் பரப்பைக் கொண்டது. இதில் கதிர் இயக்கப் பிரிவுகள் ஐந்தும் எண்டஸ் கொப்பி (Endoscopy), ஈ.ஈ.ஜி, ஈ.சீ.ஜி., சீ.ரி ஸ்கான் போன்ற கதிர் இயக்கச் சாதனங்கள் பயன்படும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகளின் தேவைகள் தடங்கல்கள் இல்லாது உடனுக்குடன் பூர்த்தி செய்ய வழிவகுக்கின்றது.

முதலாம் மாடி 2 ஆயிரத்து 200 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது மத்திய சத்திர சிகிச்சைக் கூடமாகவும் இது ஒரே தடவையில் 8 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படத்தக்க வகையிலும் சத்திர சிகிச்சையின் பின் பராமரிக்கும் பகுதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சத்திர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், உடுப்புக்கள் வழங்கும் தொற்று நீக்கிப் பிரிவு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இது வைத்திய சேவைகளின் துரித நடைமுறைக்கு உகந்ததாக அமைகின்றது.

இரண்டாவது மாடி 2 ஆயிரத்து 70 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட இருபது படுக்கைகளுடனும் மேலும் தீவிர தொற்றுக்களையுடைய சிகிச்சைக்காக இரு அறைகளில் 22 படுக்கைகள் கொண்டதாகவும் அமைவதோடு மத்திய ஆய்வுகூடத் தொகுதியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைத்துப் பரிசோதனைகளும் ஒரே இடத் தில் மேற்கொள்ளப்பட்டு வைத்திய சேவையை முன்னெடுக்க பெரிதும் உதவுகின்றது.

மூன்றாம் மாடி எதிர்கால திட்டங்களுக்கு அமைவாகப் பின்னர் வடிவமைக்கத்தக்க வகையுடன் அமைந்துள்ளதுடன் இதன் ஒரு புறத்தில் குளிரூட்டித் தொகுதிகள் பொருத்தப்படும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு பாரிய வேலைத்திட்டம் யாழ்.மக்களுக்குக் கிடைப்பது இதுவே முதல் தடவையாகும். இத்திட்டம் கடந்த பல வருடங்களுக்கு முன் நடைபெறவிருந்தும் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் இதற்கு இடம் தராததால் தற்போது ஜனாதிபதி சுகாதார அமைச்சினூடாக இது வடக்குக்கு வசந்தமாகக் கிடைக்கவுள்ளது.

மேலும் இரண்டாவது நிகழ்வாக பிற்பகல் இரண்டு மணிக்கு இந்திய அரசுக்கான உயர்ஸ்தானிகர் இந்திய அரசாங்கத்தால் ரூபாய் 120 மில்லியன் பெறுமதியான ஒரு தொகை வைத்திய உபகரணங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் கையளிக்கப்பட இருக்கின்றது. இந்நிகழ்வும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இந்திய அரசின் உயர்ஸ்தானிகர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இவை சத்திர சிகிச்சைப் பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் சிகிச்சைப் பிரிவுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது யாழ்.மக்களின் வைத்தியத் தேவையை நவீன முறைகளுடன் தொடர்பாக்கியுள்ளதால் யாழ். மக்களின் தேவைகள் நவீன முறையில் பூர்த்தியாவதில் மக்களுடன் சேர்ந்து தாமும் மகிழ்வெய்துவதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com