Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இரு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், போக்குவரத்து, உள்ளூராட்சித் திணைக்களம், வீட்டுத் திட்டம், விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி, பனை அபிவிருத்தி சபை, வாழ்வாதாரம், வீதிப்புனரமைப்பு, மரநடுகை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, வர்த்தகத்தொழிற்துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் சில கோரிக்கைகள் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பிரகாரம் யாழ்.மாவட்டத்தின் மண்டைதீவு மற்றும் வரணி பகுதிகளில் பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினரை அங்கிருந்து விலக்குவது தொடர்பாகவும், அந்தக் காணிகளை மீளவும் பொதுமக்களிடம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமெனவும் இணைத்தலைவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் இருமாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குளங்கள், வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவற்றின் புனரமைப்புப் பணிகள் தொடர்பிலும் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடான மின்சார விநியோகத் திட்டம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே இம்மாதம் 15 ஆம் திகதி மரம்நாட்டு விழாவொன்று மாகாணசபையூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்கான நிதியுதவியை மாகாண ஆளுநர் வழங்கவுள்ளதுடன், ஆனையிறவு உப்பளம் மற்றும் அச்சுவேலி தொழிற்பேட்டையை மீளவும் இயங்குவதனூடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் இரு மாவட்டங்களிலும் குடியிருப்பு இல்லாத மக்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் அதேவேளை உடனடியாக கூரைத்தகடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பாக தொடர்ச்சியாக மழை பெய்தும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.




Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com