Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் இயங்கி வந்த ‘ஆவா’ கொள்ளைக் குழு கைது,21 வயது பையன் தலையாம்

aava-3யாழில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்று கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், உட்பட உயிராபத்து ஏற்படுத்த கூடிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன

இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்ஜீவ ஜெயக்கொடி தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் மூலமே இந்த குழுவை நாம் கைது செய்துள்ளோம்.

சந்தேகநபர் தந்த வாக்கு மூலத்தினை அடுத்து எனதும் கோப்பாய் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் .எம்.எஸ்.ஏக்கநாயக்க தலைமயிலான பொலிஸ் குழு ஏனையவர்களை கைது செய்தது.

அவ்வாறு கைது செய்யபட்ட 09 பேரிடமும் இருந்தும் கைக்குண்டுகள் 2, வாள்கள் 12, கைகிளிப் (நக்கில்ஸ்) 2 மற்றும் கேபிள்கள் இரும்பு கம்பிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்பாணத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் குழுவாக இணைந்து தென்னிந்திய சினிமாப் பாணியில் மோட்டார் சைக்கிள்களின் இருக்கைகள் (சீற்), மற்றும் மழை அங்கி (ஜக்கற்) போன்றவற்றிற்குள் வாள்களை கொண்டு நடமாடித்திரிந்துள்ளார்கள்.

இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகளை வாள் களை காட்டி மிரட்டி, கொலை, கொள்ளை, கப்பம் கோரல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த குழுவுக்கு ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற 21 வயது சந்தேகநபரே தலைமைதாங்கி வந்துள்ளதுடன் இந்த குழுவுக்கு ஆவா குழு என பெயரும் சூட்டியுள்ளனர். இக் குழுவில் உள்ளவர்கள் 17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

இவர்கள் குழுவாக நிற்கும் வீதிகளில் செல்லும் பொதுமக்கள் இவர்கள் முன்னால் இறங்கி செல்ல வேண்டும் அதனை மீறுபவர்கள் மீது இவர்கள் தாக்குதல்களை நடாத்திய சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இக் குழுவின் தலைவன் வினோதன் வழங்கிய தகவலின் அடிப்டையில் இதுவரை யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சுன்னாகம், மானிப்பாய் போன்ற பகுதிகளில் வைத்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களை தொடர்ந்து தேடி வருகின்றோம்

இந்த விசேட நடவடிக்கைக்காக 21 பேர் கொண்ட விசேட பொலிஸ் அணி 03 அணியாக செயற்பட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைக்கு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் புரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள்.

இந்த குழுவின் கைது நடவடிக்கையை அடுத்து பொதுமக்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்துக்கள் வந்துள்ளன

இந்த குழுவினால் பாதிக்கப்பட்ட மக்கள் இனி பயமின்றி வந்து அவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை நேரில் வந்தோ தொலைபேசி மூலமோ அல்லது தமது பெயர் விபரங்களை கூறாது கடிதம் மூலமாகவோ பதிவு செய்யுமாறும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கேட்டு கொண்டுள்ளார்.

பொதுமக்களினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தகவல்கள் அடிப்படையில் தான் பொலிசாரினால் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் இனிவரும் காலங்களில் யாழில் யாருமே ஆயுதம் தூக்காத வகையில் இவர்களுக்கு தண்டனைகள் பெற்று கொடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அதேவேளை யாழில் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனடிப்படையில் பெற்று கொண்ட வாகனங்களுக்கான தவணை பணத்தை கட்ட தவறியவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு சில நிதி நிறுவனங்கள் இந்த குழுவை பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com