Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மீசாலையில் மாணவிகளை மோ.சைக்கிளில் இழுத்து ஏற்ற முயன்ற நபர்

தனியார் கல்வி நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளைப் பிடித்துத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதற்கு முயன்ற நபரினால் நேற்று மாலை மீசாலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீசாலை, புத்தூர்ச் சந்திப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு நேற்றுப் பிற்பகல் மாணவிகள் சென்றுகொண்டிருந்தனர்.அந்தவேளை அந்தப் பகுதியில் ஏ9 வீதியில் ஊதா நிற ஸ்கூட்டி பெப் மோட்டார் சைக்கிளில் ஒருவர் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் திடீரென மாணவிகளைத் துரத்த ஆரம்பித்தார்.

தரம் 10 இல் கல்வி பயிலும் 3 மாணவிகள், தரம் 6இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் அடுத்தடுத்துச் துரத்திச் சென்று இந்த நபர் அவர்களைக் கையால் பிடித்து இழுத்துள்ளார். அத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு அந்த மாணவிகளை மிரட்டியுள்ளார்.
இந்த நபரின் பிடியில் இருந்து விடுபட்ட மாணவிகள் கூக்குரலிட்டுக் கொண்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்த தனியார் கல்வி நிலையத்துக்குள்ளேயும் செல்ல முயன்றுள்ளார். கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினர் அவரை நெருங்க முற்பட்டபோது அவர் ஓடித் தப்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவங்களினால் நேற்று பிற்பகலுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
மாணவர்களுக்கு நடந்ததை அறிவதற்காக கல்வி நிலையத்தை நோக்கிப் பெற்றோர் விரைந்தனர்.குறித்த நபர் நீல நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிறத்திலான ஹெல்மெட்டும் அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மோட்டார் சைக்கிள் இலக்கம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com