Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் ஒரே நாளில் இரு சிறுமிகளை காணோம்

மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் கனகலிங்கம் லக்சிகா (வயது 13) என்ற சிறுமியை நேற்று நண்பகல் முதல் காணவில்லை என்று வல்வெட்டித்துறைப் பொலிஸில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி நள்ளிரவு வரை திரும்பி வரவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்ற மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் பட்டுள்ளது.
உயர்தரம் படிக்கும் மானிப்பாயைச் சேர்ந்த எஸ்.றொஷானி (வயது 17) என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.
கடந்த 22ஆம் திகதியும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருத்தியும் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
நல்லூரிலும் நேற்று சிறுமி ஒருத்தி மாயம்
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பெருந்திருவிழாவின் கடைசி நாளான நேற்று, பூங்காவனத்தின் காலைப் பூசை வழிபாடுகளுக்கு என ஆலயத்துக்கு வந்த 6 வயதுச் சிறுமி ஒருத்தி காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
புதிய செம்மணி வீதி, பாரதிபுரத்தைச் சேர்ந்த வேலன் வேணிகா (வயது 6) என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.
பெற்றோருடன் ஆலயத்துக்கு வந்த சிறுமி திடீரென மாயமாகி விட்டார். தொடர்ச்சியாக ஒலி பெருக்கியில் அறிவித்தல் கொடுத்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பெற்றோரால் நல்லூரில் உள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.
நேற்று இரவு வரை சிறுமி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com