Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் விவரங்கள் விரைவில் ஊடகங்களுக்கு

யாழ்.மாவட்டத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைத்த வண்ணமுள்ளன. அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர், விவரங்கள் விரைவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும். இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வருடத்தில் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான 175 வன்முறைகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான வன்முறைகள் வேலைத்தளங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலும் சமூக உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்களே ஈடுபட்டு வருகின்றனர். இவை தொடர்பில் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் எனக்குப் பல முறைப்பாடுகளைச் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுடன் அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு எனக்கு நூற்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் தொடர்பு பட்டவர்களின் பெயர், விவரங்களையே ஊடகங்கள் வாயிலாக வெளியிடவுள்ளேன்.

இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணச் சமூகம் தற்போது கட்டுபாடற்ற நிலைக்குள் பிரவேசிக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். மீண்டும் முன்னரைப் போன்ற கட்டுப்பாடான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

பெண்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ள வேண்டுமென்றே சிலர் ஈடுபடுகின்றனர். இருபாலைப் பகுதியில் மாணவி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர் பாக எமது உத்தியோகத்தர்களால் விசாரணைகள் மேற் கொண்ட போது சரளமாகத் தமிழ் பேசிய இளைஞர்களே தன்னை வெட்டியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதற்குக் காரணம் பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே. இனி வரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com