Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் உடன் மீள்குடியமர்வு-அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டிய பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எப்போது கிடைக்குமோ அப்போதே உடனடியாக மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த வியாழன் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அரச அதிபர் இவ்வாறு கூறினார்மண்டைதீவு, மாதகல், மாரீசன் கூடல், வயாவிளான் மற்றும் ஊறணி போன்ற இடங்களில் உள்ள மக்கள் இதுவரை மீளக் குடியேற்றம் செய்யப்படவில்லை.

இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1990களில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை என அரசு தெரிவித்து விட்டது. ஆனால் இவர்கள் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாதுரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறிதரன் ஆகியோர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், மண்டைதீவுப் பகுதியில் கடற்படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. மாரிசன் கூடல் பகுதியின் ஒரு பகுதி மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாதகல் கடற்கரைப் பகுதி மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. மாதகல் மேற்குப் பகுதியில் மிதிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள் குடியேற்றத்துக்கான அனுமதி இன்னமும் கிடைக்வில்லை.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாகவே அப்பகுதிகளில் மீள் குடியேற்றம் நடைபெறும். மாதகல் மேற்குப் பகுதியில் 358 குடும்பங்களும், மாரிசன் கூடல் கடற்கரைப் பகுதியில் 23 குடும்பங்களும் மீளக் குடியேற்ற வேண்டும். அனுமதி கிடைத்தவுடன் அந்தப் பகுதி மக்கள் மீள் குடியேற்றப்படுவர் .

பாதுகாப்பு அமைச்சில் இருந்து அனுமதி பெற்றுத்தான் நாங்கள் மக்களை மீள் குடியேற்றுவது வழக்கம் மாதகல் பகுதியில் மக்களை மீள் குடியமர்த்தப்படாத பகுதிகள் தொடர்பான அறிக்கைகள் பிரதேச செயலாளர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு அனுமதி தரும் பட்சத்தில் உடனடியாக நாங்கள் மீள் குடியமர்வுகளை செய்து வருகின்றோம் என்றார் அரச அதிபர்.

கிளிநொச்சி,யாழ்ப்பாண மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதற்தடவையாக கிளிநொச்சியில் கடந்த வியாழன் நடைபெற்றுள்ளது.நேற்று முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறிதரன், முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலஸ்ரின் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.டி நீல் தளுவத்த, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com