Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் வெற்றி ; நாளை முதல் பணி

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் போதனை சாரா ஊழியர்கள் கடந்த ஆறாம் திகதி முதல் இருபத்தொரு நாள்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் நாளை முதல் பணிக்குத் திரும்பவுள்ளனர்.

இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் தொழில் ஆணையாளருக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுக்களின் முடிவில், இணக்கம் காணப்பட்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து வைத்தல், சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துதல், கல்வி உயர் கல்வி அமைச்சுக்கும், அனைத்துப்பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழுவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுமார் பன்னிரண்டாயிரம் போதனை சாரா ஊழியர்கள் கடந்த ஆறாம் திகதி முதல் இருபத்தொரு நாள்களாக பணிப் புறக்கணிப்பினை நடாத்தி வந்தனர். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்த போராட்டங்கள் இடம் பெற்றதோடு, கொழும்பில் கல்வி உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் முன்னால் பல்லாயிரக்கணக்கான போதனை சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியிருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பணிப்புறக்கணிப்புக் கோரிக்கைகளின் வெற்றி வேண்டி சமய நிகழ்வுகளை முன்னெடுத்ததோடு கடந்த நான்கு நாள்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தது. இன்று பணிப்புறக்கணிப்புத் தொடர்பான பேச்சுக்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் நாளை புதன்கிழமை முதல் பணிக்குத் திரும்பவிருப்பதாகவும், இன்றைய இணக்கப்பாடு தொடர்பாக ஊழியர்களுக்கு விளக்கமளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நாளை காலை 8.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் மண்டப முன்றலில் நடைபெறவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் செயலாளர் அறிவித்திருக்கிறார்

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com