Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » பண்ணை வீதியில் பயணிப்போர் நிலை கவலைக்கிடம் (படங்கள் இணைப்பு)

தீவகத்தைச் சென்றடைவதற்கான ஒரேஒரு நுழைவாசலாக இருக்கும் பண்ணை வீதி 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் ஏற்பட்ட நிசாப் புயலினால் முற்றாகச் சேதமடைந்தது.

அதாவது இவ் அனர்த்தம் ஏற்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் இன்றுடன் முடிவடைகின்ற போதிலும் இவ் வீதியின் புனரமைப்புத் தொடர்பில் அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கினைப் பேணி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவ் வீதியினை மழைக்கு முன் செப்பணிட வேண்டும் என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும் இவ் வீதியில் எவ்வித புனரமைப் பணிகளும் இடம்பெறவில்லை. இதனால் இவ் வீதியினால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொதுமக்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அனைவரும் தங்களின் பணிகளுக்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியாதுள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ் வீதியில் விபத்துக்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதுடன் ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்திக் கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக எஞ்சியிருந்த வீதியும் முற்று முழுதாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் வீதி அகலமாக்கும் பணிகளும் இடைவிடாது தொடர்ந்த வண்ணம் உள்ளதுடன் அதன் வேகம் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே மக்களும் அரசாங்க ஊழியர்களும் தங்களின் கடமைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்கும் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கும் இவ் வீதியினை சம்பந்தப்பட்டவர்கள் முன்னுரிமைப்படுத்தி மிக வேகமாகச் செப்பணிட வேண்டும் என்பது அவ் வீதியினால் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைவரினதும் வேண்டுகோளாகும்.

-தீவகன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com