Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பட்டதாரிப் பயிலுநர்கள் நிரந்தர நியமனம் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மகஜர்

Exam-resultsயாழ்.மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 2 ஆம் திகதி 2000 இற்கு அதிகமான பட்டதாரிகள் பயிலுநர்களாக உள்வாங்கப்பட்டனர். ஆறு மாதங்களில் நிரந்தர நியமனம் என்ற அடிப்படையில் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் கடமையாற்றிய தங்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என முறையிட்டுள்ளனர். அவர்கள் கையளித்த மகஜர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிப் பயிலுநர்கள்
யாழ்.மாவட்டம்.
18.11.2013

இணைப்பதிகாரி,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
யாழ்ப்பாணம்.

நிரந்தர நியமனம் தொடர்பானது

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதே ஆண்டு ஜீலை மாதம் 2 ஆம் திகதி 2000 இற்கு அதிகமான பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பயிலுநர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஏனைய திணைக்களங்களிலும் இவர்கள் பயிலுநர்களாக உள்வாங்கப்பட்டனர். ஆறு மாதங்களில் நிரந்தர நியமனம் என்ற அடிப்படையிலேயே நாங்கள் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் பயிலுநர்களாக உள்வாங்கப்பட்டோம். அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு எமது பயிலுநர் காலம் இரட்டிப்பாக்கப்பட்டது. அதாவது, ஒரு வருடத்தின் பின்னரேயே நிரந்தர நியமனத்திற்குள் நாம் உள்வாங்கப்படுவோம் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் காலமும் 2013.07.02 ஆந் திகதியுடன் நிறைவடைந்துள்ள போதிலும் எமக்கான நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை. யாழ்.மாவட்டச் செயலகத்தின் செயற்றிறன் அற்ற தன்மையாலேயே எமக்கு நியமனம் வழங்கல் பின்தள்ளப்படுகின்றது. ஆறு மாதங்களில் நிரந்தர நியமனம் என்று கூறி உள்வாங்கப்பட்ட எங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாமையால் நாங்கள் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

குறிப்பாக, எங்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் 25 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையான ஊதியத்துடன் பணியாற்றிய நிலையில்; ஆறு மாதங்களில் அரச நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த தொழில்களை உதறித்தள்ளிவிட்டு பயிலுநராக வந்து இணைந்தோம். ஆனால் எமது நிரந்தர நியமனம் தொடர்ந்தும் பின்தள்ளப்படுவதால் எமது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களாக பட்ட கடன்களை மீள அடைக்க வழி தெரியாததால் எங்களில் பலர் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் தற்கொலை மனநிலைக்குச் சென்று காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.

எமக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்பட்ட பின்னர் யாழ். மாவட்டத்தில் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக எமக்கு இளையவர்கள் பலருக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனங்கள், கிராம அலுவலர் நியமனங்கள், முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள், ஆசிரியர் நியமனங்கள் போன்றன வழங்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரத் திணைக்களங்களிலும் பலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எங்களைப் பார்த்து பட்டதாரிப் பயிலுநர்கள் என்று ஏளனமாக அழைக்கின்றனர். இது எமக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அந்தந்த இடங்களில் இருந்து பார்த்தால் தான் அதிகாரிகளுக்கு இந்த வேதனை புரியும்.

இதனைவிட, எங்கள் நிரந்தர நியமனங்கள் இழுத்தடிக்கப்படுவதால் தொடர்ந்தும் நாங்கள் பிறருக்குப் பாரமாக, பிறரில் தங்கி வாழ்வோராக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எமது பட்டதாரிப் பயிலுநர்களில் பலருக்கு 33 தொடக்கம் 35 வயதுக்கு மேலாகிவிட்டது. ஆனால் தொழில் இன்மையால் அவர்கள் இதுவரை திருமணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் ஒரு செயற்பாடாகும்.

நான்கு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற எங்களுக்கு ஒன்றரை வருடங்கள் பயிலுநர் கடமை. எந்த நாட்டிலும் நடைபெறாத அதிசயமான செயற்பாடு இதுவே ஆகும். சட்ட ரீதியாக நோக்குகின்ற போது எங்களுக்கு உரிய நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதானது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினராகிய நீங்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என்று நாங்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றோம். இன்னும் சில வாரங்களில் எங்களுக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தர ஆவன செய்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். நம்புகின்றோம்.

ஏனைய மாவட்டங்களிலுள்ள சில மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலர் பிரிவுகளிலும் பணியாற்றுகின்ற பட்டதாரிப் பயிலுநர்களுக்கு 2013.07.02 ஆந் திகதியிடப்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த திகதியிலிருந்து அவர்களுக்கு உரிய வேதனம் கிடைக்கும் என்றும் இதுவரை 10 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டமையால் 2013.07.02 இலிருந்து நிரந்தர நியமனம் என்று கருதப்பட்டு எஞ்சிய தொகை சேர்த்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படவில்லை. நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பின்னரும் 10 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது.

ஆனால், எமது மாவட்டத்தில் இந்த நிலை நடைபெறாமல் தாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருவதுடன் உடனடியாகவே எமக்கான உரிய ஊதியத்தை வழங்க ஆவன செய்வதுடன் எமக்குரிய எஞ்சிய தொகையையும் உனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
-நன்றி-
பிரதிகள்:
1. அரச அதிபர்,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.

2. அனைத்துப் பிரதேச செயலர்கள்.

3. அனைத்து பத்திரிகை ஊடகங்கள்

4. அனைத்து இணைய ஊடகங்கள்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com