Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கோப்பாய்க் கோமானின் நூற்றாண்டு விழா

கோப்பாய் கோமன் அமரர் கு.வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு விழா நினைவுப் பேருரையும் சாணக்கியம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றன.

நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் கோப்பாய்க் கிளைக்குழுத் தலைவர் சி.திருநாவுக்கரசு தலைமையில் இடம்பெற்றது.

கோப்பாய் கோமானின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் கோமான் வன்னிய சிங்கமும் தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் விசேட நினைவுப் பேருரை இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சி.சிற்றம்பலம் நினைவுப் பேருரையை சமர்ப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சாணக்கியன் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அந்த நூலின் முதல் பிரதியை ஒய்வு பெற்ற பயிர் செய்கை உத்தியோகத்தர் க.திரவியம் வெளியிட்டு வைக்க தமிழரசுக் கட்சியின் உப செயலாளர் சி.வி.கே.சிவஞானம் பெற்றுக்கொண்டார். நூலின் வெளியீட்டுரையை விரிவுரையாளர் எஸ். லலீசன் நிகழ்த்தினார்.

தொடர்ச்சியாக நினைவுப் பேருரைகள் இடம்பெற்றன. புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் கிளை குழுவின் செயலாளரும் பாடசாலை ஆசிரியருமான எஸ். கஜதீபன், தமிழரசுக் கட்சியின் உப செயலாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் அந்த உரைகளை நிகழ்த்தினர்.

நிகழ்வுக்கு சமுகமளித்திருந்த கோப்பாய் கோமானின் புதல்வியார் டாக்டர் திருமதி ஹோமாவதி பாலசுப்பிரமணியத்துக்கு நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க உப தலைவி திருமதி சோதிமலர் ஆறுமுகநாதன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

அத்துடன், கோப்பாய் கோமான் நூற்றாண்டு விழாகுழுவின் உறுப்பினரும் யாழ். மாநகர சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினருமான எ.பரஞ்சோதி கோப்பாய்க் கோமானின் புதல்வியாருக்கு நினைவுச் சின்னத்தை விழாக் குழு சார்பாக வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார் உப தலைவர் எஸ். தர்மலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ள வடக்கின் சில உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com