Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » கோப்பாயில் சிசுவைப் புதைத்த தாய் (படங்கள் இணைப்பு)

பிறந்த உடனே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சடலமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின்னர் சிகிச்சைக்காக தாயார் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிசுவின் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் தீவிர விசாரணைகளை நடத்திய நீதிவான், சிசுவைப் பிரசவித்த போது தாயார் பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த உடைகள் மற்றும் மருந்துக் குளிகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.
சிசுவின் சடலத்தைப் புதைத்தவர் என்று கூறப்படும் ஆண் மற்றும் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவரும் தாயை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
சிசுவைப் பெற்றெடுத்த தாயின் மற்றொரு மகளான சிறுமியை  சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைத்து சிறுவர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில் சம்பவம் பற்றித் தெரிய வந்ததாவது:
இணுவிலில் வசித்து வந்த 42 வயதுடைய பெண், கடந்த 18ஆம் திகதி தொடக்கம் கோப்பாய் வடக்கு புதிய சந்தைக்கு அருகிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரலிங்கம் என்பவர் 3 வருடம் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் 23ஆம் திகதி நள்ளிரவு வேளை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அவருடன் தங்கியிருந்த நபர் வீட்டின் பின்புறம்  நிலத்தில் புதைத்துள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு சென்று குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். நீதிவானுக்குத் தகவலையும் வழங்கினர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தேக நபரான பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது.
நான் எனது கணவர் அல்லாத ஒருவருடன் தற்பொழுது வசித்து வருகின்றேன். கர்ப்பம் தரிப்பதனைத் தடுப்பதற்காக கல்வியங்காடு சந்தியிலுள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்டேன். எனினும் எப்படியோ கர்ப்பம் தரித்து விட்டேன். அதனால் வேறு இடத்தில் கர்ப்பத்தைக் கலைக்க முயன்றேன். நேற்றுமுன்தினம் தீடீரென நள்ளிரவு வேளை வயிற்றுக்குத்து ஏற்பட்டு குறைமாதமாக சிசு இறந்த நிலையில்  பிறந்தது. என்னுடன் தங்கியிருந்தவர் அந்தச் சிசுவை புதைத்தார். இப்படி அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன.
நன்றி: சரிதம்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com