Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம் ஜனாதிபதி திறந்துவைத்தார்(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம்-பூநகரியை இணைக்கும் கேரதீவு – சங்குப்பிட்டிக் கடற்பாலம் ஊடான போக்குவரத்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாலம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஆயிரத்து 37 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. பிரித்தானிய அரசிடம் பெறப்பட்ட 800 மில்லியன் ரூபாய் இலகு கடனுதவியுடன் அந்நாட்டு இரும்புப்பாலம் அமைக்கும் நிறுவனத்தின் உதவியுடன் கேரதீவு – சங்குப்பிட்டி கடற்பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரு வழிப்பாதையுடைய 288 மீற்றர் நீளம் கொண்ட இப்பாலம் ஒரு வருடக் காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 பாதையூடாகக் கொழும்பு செல்வதை விடவும் கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலத்தினூடாகக் கொழும்பு செல்லும் தூரம் சுமார் 120 கிலோ மீற்றர் குறைவானது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் ஏ-32 பாதையூடாகக் கொழும்பு பயணித்தால் சுமார் மூன்று மணிநேரத்தை மீதப்படுத்தலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாலம் ஊடான போக்குவரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்குக் கொழும்பிலிருந்து விமானத்தில் பலாலி வந்தடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து பூநகரிக்கு உலங்கு வானூர்தியில் வருகை தந்தார்.

ஜனாதிபதியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோர் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்பாதையின் மூலம், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம் ஊடாகக் கொழும்பை அடைய முடியும் என்பதால், போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைந்து, பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com