Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » குடா நாட்டிலும் பேரீச்சை வளர்க்கலாம் யாழ் சுவாத்தியத்துக்குப் பெரும்பயன் தரவல்லது

மரவள்ளிக்கிழங்கு, தக்காளி இவை இரண்டும் தமிழ் நாட்டில் பிந்திய காலத்தில் அறிமுகப்படுத்தப் பெற்ற ஒரு வகை உணவுப் பயிர்களாகும். இந்தப் பயிர் கள் அறிமுகப் படுத்தப் பெற்ற காலத் தின் முன் பின்னாக பேரீச்சை இந்தியாலும் பாகிஸ் தானிலும் அறிமுகமானது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பறவைகள் மூலம் பேரீச்சமரம் இந்தியா, பாகிஸ்தான் நாடு களுக்கு அறிமுகப்படுத்தப்பெற்றது என்று கூறலாம்.
இந்த மரங்களை இனங்கண்டு பிரிக்க முடியாது. இந்தப் பேரீச்சம் மரம் குறிப்பிட்ட ரகம் என்று இச் செய்கை யுடன் ஈடுபாடு உடைவர்களாலும் வகுத்துக் கூறமுடியாது.
இந்த மரங்கள்  நூறு ஆண்டு களுக்கு முன்னர் பாகிஸ்தான் பகுதி யில் இருந்தும் அரேபியாவில் இருந்தும் பறவைகள் தாம் எடுத்து வந்த பழங்களை உண்ட பின் எஞ்சிய வற்றை உமிழ்ந்து கழித்துவிட்டுச் சென்ற பின்னர் வித்துக்களிலிருந்து வளர்ந்ததாக நம்பப்படுகிறது. அந்தத் தாய் மரங்களில் இருந்து பழங்களின் விதைகள் மூலமாகவும் பக்கக் கன்றுகள் மூலமாகவும் இந்தச் சாகுபடி இந்திய நாட்டில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மண்வளம் பேரீச்சைச் சாகுபடிக்கு உகந்த வளமான பகுதியென “லங்கா காடியன்” பத்திரிகையில் 1990ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. இந்தக் கட்டுரையை யாழ்ப்பாணத்தவரும் கலிபோர்னியாவில் வசித்தவருமான விவசாய அறிஞர் ங.கூ. சரவணபவன் அன்று எழுதியிருந்தார். அண்மைக் காலத்தில் தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றிலும் பேரீச்சைச் சாகுபடி பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பாகியது.  இந்தத் தொலைக்காட்சி  நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் யாழ்ப்பாண மக்கள் பேரீச்சைச் சாகுபடியில் ஈடுபட்டால் அதன் மூலம் உச்சப் பலனை ஈட்டமுடியுமென்ற எண்ணம் உதித்தது.
தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி பகுதிக்குச் சென்று நேசறியைப் பார்வையிட்ட பொழுது பேரீச்சைச் சாகுபடி பற்றிச் சம்பந்தப்பட்டவர் களுடன் உரையாடி நிறைய விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பேரீச்சம்பழ மரத்துக்கு சொட்டு நீர்ப்பாசனமும் இயற்கை எருவும் தேவை. இவை உற்பத்தியை அதிகரிக்க மிக உதவும்.
பேரீச்சை மரத்துக்கு பூச்சி மருந்து தேவை யில்லை. அதே போன்று இரசாயன உரமும் தேவை யில்லை. இளம் மரக்கன்றுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 கிலோ மாட்டு எரு இட்டு வந்தால் மரங்கள் வளர்ந்து பலன் தரும் பொழுது ஆண்டு ஒன்றுக்கு 100 கிலோ மாட்டு எரு போட்டு வந்தால் விளைச்சல் அல்லது அறுவடை அதிகரித்து வருவாய் பெருகும்.
பேரீச்சையில் பல இனங்கள் உண்டு. விதையிலும் பயிர் உண் டாகும். வளர்ந்த மரத்தடியிலிருந்தும் வாழைக் குட்டிகள் போன்று குட்டிகள் முளைக்கும்.  இக்குட்டிகள்தான் நடுவதற்கு மிகச்சிறந்தவை. இவை நான்கு வருடத்தில் காய்க்கும். விதைக்கன்றுகள் காய்ப்பதற்கு ஆறு வருடங்கள் எடுக்கும். இவற்றை விட அதிக விளைச்சல் தரும் சிறந்த ரக பெண் மரங்களில் இருந்து திசுக்களை எடுத்து கன்றுகளை உருவாக்குகிறார்கள். இந்த முறையில் உற்பத்திச் செலவு அதிகமாகும்.

பரீட்சார்த்தமாக ஓமான் நாட்டிலிருந்து நல்ல இன விதைகள் வருவித்து நாற்றுப் போட்டு 50 கன்றுகள் வரை எனது தோட்டத்தில் நட்டுள்ளேன்.
இந்தச் சாகுபடியில் விருப்பம் உள்ளவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு சுமார் 100 கன்றுகள் வரை என்னிடம் உண்டு. ஓர் இடத்தில் குறைந்தது பத்துக் கன்றுகளாவது நடவேண்டும். இதில் ஒரு ஆண் கன்று இருந்தால் மட்டுமே பெண்மரம் காய்ப்பதற்கு உதவும்.
பனை,தென்னைமரம், பாம் ஒயில்மரம், பேரீச்சை மரம், ஈச்சைமரம் இவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை.
பேரீச்சை மரம் பனை மரம் போன்று பெரிதாக வளரும். இது சுமார் 30 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியதுபேரீச்சைச் சாகுபடி மிக இனிமைதரும் வறட்சி நிலப்பயிர் என்பது அறிஞர் கருத்து.சொட்டு நீர் முறையில் சிறிதளவு நீர் பாய்ச்சுவது சாகுபடியை அதிகரிக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பேரீச்சைமரம் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும். நாலு அல்லது ஐந்து ஆண்டுகளில் பேரீச்சம் காய்கள் உருவாகும். ஒரு மரத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பழங்கள் பெருமளவில் உற்பத்தியாகும். பேரீச்சை உற்பத்தியைத் தொழிலாக ஏற்று வசதியான அளவு இலாபம் பெறமுடியும். ஒரு மரம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 200 கிலோ பழங்களைத் தரும்.
பேரீச்சம் பழத்தின் உள்ளூர் விலையுடன் வைத்து சராசரி உற்பத்தியைப் பார்க்கும் பொழுது இது மிகுந்த இலாபம் தரும் ஒரு தொழிலாகும்.
பேரீச்சு பல வருடங்களுக்கு பயன் தரும். பனை மரம் போன்று பல பயன்களைப் பேரீச்சை மரத்திலும் பெறலாம். சுவையான கள் இதிலிருந்து பெறலாம். பேரீச்சம் பழத்திலிருந்து பலவகை உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். பேரீச்சம் பழத்தின் சாற்றைக் காய்ச்சி வெல்லம் தயாரிக்கலாம்.
இருதய நோய், இரத்தச் சோகை, கர்ப்பப்பைக் கோளாறு போன்ற நோய்களுக்கு பேரீச்சம் பழம் மருந்தாகத் திகழ்கின்றது.

யாழ். குடாநாட்டுத் தரிசு நிலங்களில் பேரீச்சை சாகுபடி செய்து நல்ல வருவாய் பெறலாம் என்பது இத் துறைசார்ந்த ஆழ்ந்த ஆய்வின் பேறாகும்.
சகாரா, ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரசு நாடுகள், ஓமான், சூடான், எகிப்து, பக்ரைன், லிபியா, சிரியா, ஓமன், ஜோர்டான், அல்ஜிரியா, மேராக்க, ஸ்பெயின், கிரிஸ் ஆகிய நாடுகளில் பேரீச்ச மரங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்தியாவிலும் அரசு பேரீச்சைச் செய்கைக்கு ஊக்கமளித்து வருகிறது.

த.சண்முகலிங்கம்
நன்றி: உதயன் பத்திரிகை


Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com