Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » குடாநாட்டில் மீன்பிடி நடைமுறையில் இறுக்கம் நேற்று முதல் அமுல்

நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையிலுள்ள மீன்பிடி முறைகளுக்கு அமைய யாழ்.மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடித்தொழில் தண்டனைச் சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இந்த நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மீன் வளத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்கத்தக்க வகையிலான மீன்பிடி முறைகள் நாடளாவிய ரீதியில் மீனவர்களினால் கைக்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போர்க்காலச் சூழல் காரணமாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக கடல்வலயத் தடைச் சட்டம் அமுலில் இருந்ததனால் வடபகுதியில் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிப்பதற்குச் செல்ல முடியாமல் இருந்தது. பகல் வேளையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அத்துடன் மீனவர்களிடம் மீன்பிடி தொழிலுக்குத் தேவையான வலைகள், உபகரணங்கள் என்பன இல்லாமல் இருந்ததனால் மீன்பிடிப்பது தொடர்பான சட்ட விதிகளில் நெகிழ்ச்சிப் போக்குக் கடைப் பிடிக்கப்பட்டிருந்தது.

இப்போது கடல் வலயத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு மீனவர்கள் தடையின்றி மீன் பிடிப்பதற்குச் செல்வதனால் மீன் வளத்தை பாதுகாக்கின்ற முறையிலான மீன்பிடி முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

டைனமைட் பயன்படுத்துவது, மீன்களை மயக்கமடையச் செய்யும் மருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவது, அழிந்து செல்கின்ற மீன் இனங்களாகிய டொல்பின், கடலட்டை போன்ற கடல்வாழ் உயிரினங்களை விற்பனைக்காகவும் நுகர்வுக்காகவும் பிடிப்பது, முறையாகப் பதிவு செய்யப்படாத கடற் கலன்கள் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்துவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மீன்பிடி நீர்வழங்கல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com