Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி காலமாகிவிட்டார்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த அமரர் ஐயாத்துரை செல்லப்பா அமரர் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் ஒரே புதல்வரான செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் இரசாயன ஆசிரியராகக் கடமையாற்றி யாழ் இந்துக் கல்லூரியின் உப அதிபராகவும் விளங்கி இளைப்பாறியவர். யோக சுவாமிகள் மீது மிகவும் பற்றுக் கொண்ட முத்துக்குமாரசுவாமி அவர்கள் சிவதொண்டன் நிலையத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக விளங்கியவர். அத்துடன் 1979ம் ஆண்டு மே மாதம் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழாவின் போது நிகழவிருந்த இரத்தக் களரியைத் தடுத்து வட இலங்கையில் சுமூகமான ஆலயப் பிரவேசங்கள் நடை பெற வழிகோலியவர். இவரின் பாரியார் அமரர் தெய்வநாயகி அவர்கள் யாழ் இந்து மகளீர் கல்லூரியில் நீண்டகாலம் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றியவர். இவர்களின் ஒரே மகன் யோககுமாரன் 2003ம் ஆண்டு இங்கிலாந்தில் கார் விபத்தொன்றில் காலமானார்.

ஆசிரியப் பெருந்தகை அவர்களின் பூதவுடல் இறுதி மரியாதைகளுக்காக நாளை அக்டோபர் 11திகதி (இன்று)பொறளை ஜெயரட்ன அந்திமசேவை நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொறளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

1 Comment

  1. மனிதகுல வரலாற்றின் பண்பாட்டு வளர்ச்சியில் செதுக்கிக் கூர்மையாக்கிய நல்லியல்புகளின் உறைவிடமான மதிப்புக்குரிய செல்லப்பா முத்துக்குமாரசாமி அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தியை அறிந்ததும் துக்கம் நெஞ்சை நிறைத்தது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com