Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » கீதா கணேஷ் இன் எத்தனங்கள்- சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

சிற்பனை கீதா கணேஷ் எழுதிய ‘எத்தனங்கள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் மாதம் 06ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் திரு வை. கோவர்த்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவிற்கு முதன்மை அதிதியாக ஜப்பான் கக்சுயின் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் விரிவுரையாளருமான முனைவர். மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

வெளியீட்டுரையினை எழுத்தாளர் தாட்சாயணியும் நயப்புரையினை எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசமும் வழங்குகின்றனர். வாழ்த்துரையினை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் அவர்கள் வழங்குகிறார். யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வரும் இந்நூல் கீதா கணேஷின் முதற்தொகுதியாகும்.

சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் நிகழும் பிரச்சினைகளை இவர் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஞானம், ஜீவநதி, தினகரன், சுடர் ஒளி போன்ற சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில், வெளியான பதினொரு சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வயதான பெற்றோரின் அநாதரவான நிலை, சிறுவர் தொழிலாளர், சீதனப் பிரச்சினை என்பவற்றோடு எமது சமூகத்தில் தற்போது பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்நோக்கும் முன்னாள் பெண் போராளிகளின் அவல நிலை என ஆசிரியரின் பன்முகப்பட்ட பார்வைகளின் வெளிப்பாடாக மகளிர் தினத்தையொட்டிய சிறப்பு வெளியீடாக வரும் இந்நூல் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் காத்திரமான படைப்பாக அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
றாதிகா, நிவேதிதா, கீதா கணேஷ் போன்ற பெயர்களில் எழுதி வரும் செல்வி. லோககீதா கணேசலிங்கம் யாழ்ப்பாணம் வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வவுனியாவில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற கலைமாணிப் பட்டதாரி ஆவார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com