Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » தமிழர்கள் வாழ்வில் சிறப்புப்பெறும் தைப்பொங்கல் பண்டிகை

தமிழர்களுடைய வாழ்வில் சிறப்புப்பெறும் பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை விளங்குகின்றது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆன்றோர் வாக்காகும். தைபிறந்து விட்டால் எல்லோர் மனதிலும் மகிழ்வு ஏற்படுகின்றது. நல்ல விடயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. தை திருமகள் தங்களது வாழ்வை புத்தொளி வீசச் செய்வாள் என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.thai pongal wishes_jaffnavoice

தமிழர்களின் நாட்காட்டியின் படி தைமாதம் முதல் நாள் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தைமாதம் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் மாதமாகவும் அமைகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்க்கைக்கு நன்றியுனர்வை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது. தைத்திருநாள் உழவர்களின் நன்றிக்கடனை தீர்க்கும் திரு நாளாகவும் அமைகின்றது. உணவு உற்பத்திக்கும் உயிர்களின் வளர்ச்சிக்கும் தேவையான வெப்பம் வெளிச்சம் மழை என்பவற்றைச் சூரியன் வழங்குகின்றான் அதனால் பயிர்கள் செழித்து வளர்கின்றன. ஆதலினால் சூரியனுக்கு நன்றிக்கடனை உழவர்கள் செலுத்துகின்றார்கள்

தை மாத காலப்பகுதியில் சூரியபகவான் தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு பிரவேசிக்கின்றான். இக்காலம் உத்தராயணகாலம் எனப்படும். இது மகர சங்கிராந்தி எனப்படுகின்றது. இத்தினத்தையே நாம் தைத்திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.
உழவன் தனது முதற்பயனை கதிரவனுக்குப் படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்கின்றான் இச்செயற்பாடு தமிழர் பண்பாட்டில் குறிப்பாக தொன்று தொட்டு வழக்கிலிருந்து வருகின்றது. தைப்பொங்கல் பண்டிகையானது கடவுள் வழிபாட்டினையும் சைவத்தமிழ் மக்களின் மரபு வழி விழுமியங்களான நன்றி மறவாமை பகிர்ந்துண்னல் அன்பு அறம் அகிம்சை புனிதம் பேணுதல் முதலான பண்புகளை வளர்க்கும் நிகழ்வாக அமைகின்றது.

இத்தகு சிறப்பு மிக்க தைப்பொங்கல் பண்டிகையானது மனித வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகின்றது. இந்நாளில் தம்மையும் தம்முடைய சூழலையும் புனிதப்படுத்தி நன்றியுணர்வோடு இறைவனை வழிபட்டு பெற்றோர் பெரியோருடைய ஆசியைப்பெற்றுக்கொள்ளவேண்டும்.

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகையானது தமிழர்களுடைய மனங்களில் குதுகலம் நம்பிக்கை புத்துணர்வு என்பவற்றினை வழங்கும் திருநாளாக விளங்குகின்றது. இந்நாளில் நாம் அனைவரும் நன்றியுனர்வுள்ளவர்களாகவும் பகிர்ந்துண்ணும் பண்புள்ளவர்களாகவும் வாழப்பழகிக்கொள்வோம்.

ஆக்கம்:
சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர்
எஸ்.ரி.குமரன்
ஆசிரியர்
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com