Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » வெடிகளின் முழக்கங்களுக்கிடையில் இளையோரின் காதுகளுக்கு ஏறவா போகிறது?

எந்தவிதமான ஆரவாரங்களுமற்றிருந்த வீதியில் திடீரென ஒரு சிறிய பேரணி போல சனக்கூட்டம் . சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை உருட்டிக் கொண்டு தலையைக் குனிந்தபடி பலர் வந்து கொண்டிருந்தனர். அவர்களின் நடைவேகத் துக்குச் சமாந்தரமாக ஊர்ந்தபடி ஒரு பெரிய கறுப்பு வாகனம். அதன் பின்பக்கம் திறந்திருக்க மூடப்பட்ட சவப்பெட்டிக்குள் இன்னும் கொஞ்சநேரத்தில் தகனிக்கப்போகின்ற ஒரு பூதவுடல். இந்த இறுதி ஊர்வலத்துக்கு கட்டியம் கூறியபடி பறைமேள ஒலி காற்றில் கலந்துகொண்டிருந்தது.

அந்தநேரம் பார்த்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு அவசர அலுவலாக வந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் தனது சைக் கிளை விட்டிறங்கி, உருட்டியபடி பூதவுடல் வைக் கப்பட்டிருக்கும் ஹேர்ஸ் வாக னத்தைக் கடக்க முற்பட்டார். எவ்வளவு விரை வாக முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த இறுதி ஊர்வலத்தைக் கடந்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்த முதியவரின் கைகளில் இறந்தவருக்கு ஏதோ ஒரு அமைப்பு அடித்து விட்டிருந்த கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் திணிக்கப்பட்டது. அவரும் போகிற நாளை அண்மித்துக் கொண்டிருந்ததால், இறந்தவர் சில வேளைகளில் தனக்குத் தெரிந்தவராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில், நோட்டீஸுன் மீது கண்களைப் படரவிட்டவாறு சைக்கிளை உருட்டத்தொடங்கினார். அதுதான் அவர் செய்த தவறு. நோட்டிசின் மீது இருந்த கண்ணை சற்று எதிரே திருப்பியிருந்தால் அடுத்து நிகழப்போகும் ஆபத்திலிருந்து தப்பியிருப்பார்.

இறந்தவரின் புகைப்படத்தைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்த முதியவரின் காலுக்கு கீழே திடீரென லேசான புகை. என்ன, ஏதென்று பார்க்க குனிவதற்கி டையில்
படார்!!!!!!!

வெடிச்சத்தமும், வெடி மருந்தின் நாற்றமும் ஏககாலத்தில் பரவின. இதை அந்த முதியவர் எதிர் பார்க்கவேயில்லை. எதிர்பாராத இந்தத் திடீர்த்தாக்குதலில் நிலைகுலைந்து போனவராக சைக்கிளோடு சரிந்தார். அவருக்கு காலமும் கை கொடுக்கவில்லை. அவர் சரிந்த பக்கம் வெள்ளம் வழிந்தோடும் வாய்க்கால் இருந்ததால் அதற்குள் அப்படியே அலாக்காக சைக்கிளின் மீது விழுந்ததில் அவரின் உடலில் சைக் கிள் கொஞ்சம் பலமாகவே தன் கைவரிசையைக் காட்டி விட்டது. விழுந்த இடத்தில் மழைவெள்ளமும் தேங்கி நின்றதால், தெப்பலாக நனைந்ததுடன், அவர் போட்டி ருந்த சேர்ட்டும் சேற்றை தன்னோடு பிரிய விடாமல் ஒட்டிவைத்திருந்தது. இறுதிஊர்வல வெடிகளின் முழக்கங்களில் கீழே விழுந்த முதியவரை எவரும் கண்டுகொள்ளவில்லை.

அவர் விழுந்த இடத்தைத் தாண்டியபடி அந்த ஊர்வலம் நகர்ந்து விட்டது. வெடிச்சத்தங்களும் தூரத்தில்தான் கேட்கின்றன.ஆனால் இன்னமும் முதியவரால் எழுந்திருக்க முடியவில்லை. எழுவதும் பின் நெஞ்சு நோவால் சேற்றினுள் விழுவதுமாக நேரம் கழிந்து கொண்டிருந்தது.வீதியால் சென்றவர்கள் முதியவரின் உண்மை நிலையை உணரவில்லை.

“உங்க பார்! இந்த வயசில குடிச்சுப் போட்டு எழும்பேலாமல் கிடக்குது. உதுகள் எல்லாம் வீடுவழிய குடிச்சிட்டு இருக்கலாம்தானே” என்று புறுபுறுத்தபடியே அகன்று கொண்டிருந்தனர்.நீண்டநேரத்தின் பின்னர் யாரோ சில புண்ணியவான்களின் செயலால் பள்ளத்தினுள் இருந்து முதியவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். நல்லவேளையாக அடி பலமாகப் படவில்லை. கொஞ்சம் தவறி அந்த அடி நேராக நெஞ்சுப் பகுதியைத் தாக்கியிருந்தால், அடுத்தநாள் முதியவருக்கும் இறுதி ஊர்வலம் நடத்தவேண்டியிருந்திருக்கும்.

சும்மா தன்பாட்டுக்கு சென்று கொண்டிருந்த முதியவரை இப்படி படுத்தபடுக்கையில் இருக்கும் நோயாளியாக மாற்றிய வெடி மன்னர்கள் அதைப்பற்றிய அக்கறையின்றி, இன்னொரு இறுதி ஊர்வலத்திலும் இப்படியாக வருவோர், போவோரின் கால்களுக்குள் வெடிகளைக் கொளுத்தி எறிந்து இன்புற்று மகிழ்ந்திருப்பர்.

பொதுவாகவே இப்போதெல்லாம் வெடிகொளுத்தாமல் எந்தவொரு செத்தவீடும் நடப்பதில்லை என்ற நிலை யாழ்ப்பாணத்தில்வந்து விட்டது. அத்துடன் விடிந்தால் தீபாவளி. முன்னரெல்லாம் தைப் பொங்கலுக்கு மட்டுமே வெடி கொளுத்தி மகிழ்ந்த யாழ்ப்பாணத்து மக்கள் இப்போது தமிழகக் கலாசாரத்திடம் தீபாவளியிலும் வெடி கொளுத்தும் பழக்கத்தை இரவல் வாங்கத்தொடங்கி விட்டார்கள். அதனால் மாரி மழைகாலத்தையும் பொருட்படுத்தாது வெடி விற்பனை யாழில் தூள் கிளப்புகின்றது. அதனால் செத்தவீடுகளின் போது மாத்திரமல்லாது, தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளின் போதும் வீதியில் பயணிப்பவர்கள், பக்கத்து வீடுகள், வேண்டா தவர்களின் வீடுகள் என்பனவெல்லாம் இத்தகைய வெடி அபாயங்களுக்கு இளைஞர்களால் உள்ளாக்கப்படுகின்றன.

அதைவிட இளம்பெண்கள் வந்துவிட்டால் இத்தகைய வெடி மன்னர்களுக்கு தனிக்குஷி வந்துவிடும். அது பண்டிகைகளாக இருந்தாலென்ன, மரணச்சடங்காக இருந்தாலென்ன, இந்தக் குஷிக்கு பஞ்சமில்லை. எப்போதும் சமத்துவம்தான். இளம் பெண்களை இலக்கு வைத்து, வெடிகளை வீசி யெறிந்து அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு இளக் காரமாகச் சிரித்து, தம் ஹீரோயிசத்தைக் காட்டுவது இளைஞர்களின் பொழுது போக்காக பண்டிகைகள் மற்றும் மரணச்சடங்குகளின் போது சர்வசாதரண மானதாக மாறிவிட்டது. இவ்வாறான வெடிக்கலா சாரத்தை நிறுத்துங்கள் என என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், வெடிகளின் முழக்கங்களுக்கிடையில் இளையோரின் காதுகளுக்கு ஏறவா போகிறது?

-உதயன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com