Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விவசாயம் » யாழ். விதை வெங்காயத்துக்கு இலங்கை முழுவதும் கிராக்கி

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுக் களஞ்சியப்படுத்தப்படும் விதை வெங்காயத்துக்கு இலங்கை முழுவதும் பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளதால் விதை வெங்காயத்தைக் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியங்களை நிறுவுவதற்கு தெரிவு செய்யப்பட்ட முன்னோடி விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவை விவசாயத்திணைக்களம் அன்பளிப்பாக வழங்கவுள்ளது.

விவசாயிகள் 50 ஆயிரம் ரூபாவை முதலீடு செய்து ஒரு லட்சம் ரூபா செலவில் மாதிரிக் களஞ்சியங்களை நிறுவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடைசெய்து நாட்டுக்குத் தேவையான வெங்காயம் முழுவதையும் உள்ளூரில் உற்பத்தி செய்வதற்கு அரசு கொள்கையளவில் தீர்மானித்திருப்பதால் உள்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வெங்காயச் செய்கைக்கான விதை வெங்காயத்தை யாழ்.மாவட்டத்தில் தயார் செய்வதற்கு முன்னோடியாகவே விதை வெங்காயத்துக்கான மாதிரிக் களஞ்சியங்கள் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகளின் வசிப்பிடங்களில் அவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

விதை வெங்காயக் களஞ்சியங்களின் கூரை ஓலையால் வேயப்பட வேண்டும். நிரந்தரமான சிமெந்துத் தூண் கொண்டதாகவும் 20 து 16 அடி தரை விஸ்தீரணம் கொண்டதாகவும் தரைப் பகுதி சிமெந்துக் கலவை கொண்டு சீர்செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கமநல சேவை நிலையப் பிரிவு ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முன்னோடி விவசாயிகளுக்கு விதை வெங்காய களஞ்சியங்கள் அமைப்பதற்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 50 மாதிரிக் களஞ்சியங்கள் நிர்மாணிக் கப்பட்டிருக்கின்றன என்றும் வலி. கிழக்கில் மேலும் 20 களஞ்சியங்கள் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் வெங்காயச் செய்கை நடைபெறுகின்ற போதிலும் புத்தளம், கற்பிட்டி, நிலாவெளி, திருகோணமலை, மட்டக்களப்பு, மொனறாகலை, அம்பாறை, வவுனியா, அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய பிரதேசங்களில் கணிசமான அளவு மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் குறித்த பிரதேசங்களில் விதை வெங்காயத்தைக் களஞ்சியப்படுத்தித் தயார் செய்வதற்கு முடியாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அவ்வாறு களஞ்சியப்படுத்திய வெங்காயங்கள் சேதமடைந்து போவதும் முளைதிறன் விகிதம் குறைவாகக் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டதை அடுத்தே யாழ். மாவட்டத்தில் முழுமையாக விதை வெங்காயத்தைத் தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com