Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள் » யாழ் மாவட்டத்தில் மாறிவரும் சமூகச் சூழலும் (HIV/AIDS) சவால்களும்

ஆபிரிக்க காடுகளில் வாழும் பச்சைக் குரங்குகளின் இரத்தத்ததில் உள்ள இவ் HIV ஆனது அப் பச்சைக் குரங்குகளின் இறைச்சியை பச்சையாக உண்ணும்போது மனிதனில் தொற்றியதாகக் கூறப்படுகின்றது.

1981ஆம் ஆண்டிலே லொஸ் ஏஞ்ஜல்ஸ் நகரிலே தன்னினச் சேர்க்கையாளர் மத்தியில் HIV தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROME பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டு நோய் என்பது இதன் விரிவாக்கம் ஆகும்.

இந் நோயானது HUMAN IMMUNE DEFICIENCY VIRUS மனித நீர்ப்பீடணக் குறைபாட்டு வைரஸ் என்னும் கிருமியால் ஏற்படுத்தப்படுகின்றது. 1983ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூக் மொண்டிக்கயரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நொபேர்ட் கலோ என்பவரும் இணைந்து இவ் வைரசைக் கண்டுபிடித்தனர்.

பொதுவாக வைரஸ் என்பவை சூழலில் உயிர்வாழ முடியாதவை. அவை உயிர் வாழ வேறு உயிர்க்கலங்கள் தேவை. ஒரு மனிதனில் இவ் வைரசானது குருதி, ஆண்களின் சுக்கிலப் பாயம், பெண்களின் யோனிமடற்சுரப்பு , பெண்களின் கருப்பைக் கழுத்துச் சுரப்பு போன்ற இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட அங்கங்களிலும் தாய்ப்பாலிலும் அதிகளவிலும் உமிழ்நீர், கண்ணீர், மலம் , சிறுநீர் என்பவற்றில் சிறிதளவிலும் காணப்படுகின்றது.

HIV தொற்றுள்ள குருதி, பாதுகாப்பற்ற பாலியல் உறவு, தாயிடமிருந்து குழந்தைக்கு என HIV தொற்று பரம்பலடையலாம். 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தரவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் HIV தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 38 ஆக காணப்படுகின்றது.

இதில் வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்நாட்டில் தொற்றுக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை 2 ஆகவும் காணப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் எத்தனை விதமாக சமூகச் சூழல் மாறிக்கொண்டிருக்கின்றது.

சமூகச் சூழலைப் பொறுத்த வரைக்கும் இம் மாற்றமானது ஆரோக்கியமாகக் காணப்படவில்லை என்ற காரணத்தினால் 2007 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியல் HIV தொற்று இன்னும் அதிகரித்துக் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

2009 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டதாலும் யாழ்ப்பாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ இறுக்கமான நடைமுறைகள் காணப்பட்டதாலும் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தோ அல்லது யாழ்ப்பாணத்திலிருந்தான போக்குவரத்தோ இலகுவாகக் காணப்படவில்லை.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் இல்லாவிட்டாலும் பிறிதொரு இடத்திலிருந்து கட்டுப்பாடான பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு தலைமைத்துவம் யாழ்ப்பாணத்தைக் கண்காணித்துக் கொண்டிந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் சமூகச் சீரழிவுகள், தண்டனைக்குப் பயந்து பெரிதாக நடைபெறவில்லை. ஆனால், இன்றைய சூழல் கேட்போர் யாருமற்று கேளிக்கை களியாட்டங்களில் திளைத்துக் காணப்படுகின்றது.

கடற்கரைகள் சல்லாப இடங்களாக மாறிவருவதை அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மூலம் நாம் அறியக்கூடியதாகவுள்ளது. தவறான பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் அதனால் கர்ப்பந்தரித்தல் , பிறக்கும் சிசுவை கிணற்றுள், பற்றைக்குள், உரப்பைக்குள் போடும் கொடூரம் என தினந்தோறும் காலையில் பத்திரிகைகள் தாங்கிவரும் செய்திகள் யாழ்ப்பாணத்தில் மாறிவரும் சமூகச் சூழலுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. வெளிநாட்டு மோகம் காரணமாகவோ அல்லது டாம்பீக வாழ்க்கையை எதிர்பார்த்தோ அல்லது கல்யாணச் சந்தையில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் விலை குறைவாக இருப்பதன் காரணமாகவோ ஏழைப் பெற்றோர் வெளிநாட்டு வரனைப் பற்றி நன்றாக விசாரிக்காது தமது பெண் பிள்ளைகளை ஏன் தற்போதைய சூழலில் ஆண் பிள்ளைகளைக் கூட வெளிநாட்டுக்கு திருமணம் செய்து அனுப்புகின்றனர். கிடைத்த அவ் வரன் நற்குணமுள்ள ஒரு வரனாக இருக்குமிடத்து யாவருக்கும் நன்மையே.

அல்லாதவிடத்து, தவறான நடத்தையுள்ள அல்லது பலருடன் பாலியல் தொடர்புகள் வைத்திருக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு வாழ்க்கைத் துணையாவதன் மூலம் HIV தொற்றும் வாய்ப்பு உள்ளது. எமது இன்றைய சமூகத்தில் பொருட்களின் விலை யானை விலை குதிரை விலை என்பார்களே அது போன்றே உள்ளது. உயர்மட்டத்து குடும்பங்களுக்கும் உயர் பதவியில் இருப்போரது குடும்பங்களுக்கும் பெரிதாகப் பாதிப்பில்லை.

ஆனால், நடுத்தரக் குடும்பங்களும் அன்றாடம் உழைத்து உண்ணும் அடிமட்ட மக்களும் இவ் விலை வாசியேற்றத்தால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றார்கள். இவ் விலைவாசியேற்றமானது கீழ்த்தர மக்களைப் பாதிக்கும்பொழுது வேறு எத்தொழிலுமே செய்யத்தெரியாத நிலையிலுள்ளவர்கள் உணவுத் தேவைக்கோ அல்லது அன்றாட அடிப்படைத் தேவைக்காகவோ பாலியல் தொழில் புரியவேண்டிய கட்டாயத்திலிலுள்ளனர்.

இலங்கையில் ஏறத்தாழ 30,000 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஆண் -பெண் பாலுறவு காரணமாக ஏறத்தாழ 85% தொற்று ஏற்படுகின்றது. ஆபாச இணையத்தளங்கள் , ஆபாச சினிமாப்படங்கள் என்பன இன்றைய யாழ்ப்பாணத்தில் மலிந்து காணப்படுகின்றன. இளம் தலைமுறையினர் அவற்றைப் பார்த்து இரசிப்பதோடல்லாமல் அதில் காண்பிக்கப்படும் காட்சிகளைப் போலத் தாமும் செயற்பட விளைகின்றனர். இதனால், HIV தொற்று ஏற்படச் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அத்துடன், திரையரங்குகளில் தமக்குப் பிடித்த நட்சத்திரங்கின் திரைப்படங்கள் புதிதாக வெளிவரும் போது அவர்களின் ‘கட்அவுட்’டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.

எத்தனையோ பாலகர்கள் பசிக்காகப் பால் வேண்டி அழ ‘கட் அவுட்’டுக்கு பாலாபிஷேகம் செய்வது மாறிவரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இன்று எமது யாழ்ப்பாணம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மூச்சுத் திணறி நிற்கின்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கலாசாரத்திற்கு எமது தனித்துவமான கலாசாரமும் மெல்ல மெல்ல மாறி வருவதை இளைஞர் , யுவதிகளின் ஆடை அலங்காரங்களைப் பார்த்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

இதென்ன ஜீன்ஸ் சேர்ட் அணிந்த ஆணும் பெண்ணும் நட்ட நடு வீதியில் கைகோர்த்துக் கொண்டு போகின்றார்களே யாரென்று பார்ப்போம் எனக் கிட்டச் சென்று பார்த்தால் அவர்கள் இருவரும் ஆண்கள் தான் என்ன வித்தியாசம் என்றால் ஒருவன் முடி வளர்த்து காதணி அணிந்திருப்பான் இதுதான் இன்றைய யாழ்ப்பாணச் சமூகம். அன்றைய யாழ்ப்பாணத்தில் அதவும் நகரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியளவிலேயே விடுதிகள் அதாவது சுபாஸ் ஹோட்டல் போன்ற ஹோட்டல்கள் அமைந்திருந்தன.

ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி ஏன் முழத்துக்கு முழம் விடுதிகள் முளைவிட்டிருக்கின்றன. இவ் விடுதிகள் தங்க வருபவர்களின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து தங்குமிட வசதியை வழங்கினால் HIV தொற்றும் வீதத்தைக் குறைக்கலாம்.

Tags:

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com