Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » யாழ். இந்துவின் சங்கமம் பிரமாண்டமான இசைத்தொகுப்பு

சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என்பார்கள். அந்த காலம் இன்று மலையேறி விட்டது. இங்கு சிறுவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக அவர்களின் அடையாளமாக வெளிவந்துள்ளது சங்கமம் இசைத்தொகுப்பு.

சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி, நட்பு,வீரம் எனப் பல்சுவை அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு காத்திரமான படைப்பாக உருவாகியுள்ளது.

யாழ். மண்ணில் இருந்து வெளியாகும் இந்த இசைத்தொகுப்பின் அனைத்துப் பாடல்களுக்கும் இந்துவின் மைந்தன் சத்தியன் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

யாழ் .இந்துவின் கல்வித் தெய்வம், காவல் தெய்வம் ஞானவைரவ பெருமான். அவருடைய அருட்கடாட்சத்தால் இன்று சாதனை படைத்துள்ளோர் பலர். ஞானவைரவப் பெருமானின் அருளால் இந்துவின் மைந்தர்கள் எங்கு சென்றாலும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்றும் பலரிடம் உண்டு. அதுவே உண்மையும் கூட. அந்த நம்பிக்கைக்கிணங்க மாணவர்களின் படைப்பான சங்கமமும் ஞானவைரவ பெரு மானை போற்றும் வகையில் பாடல் ஒன்றை முதல்பாடலாக வெளியிடுகின்றது. ஆசிரியர் நா.விமல நாதன் இயற்றிய பாடலைப் பழைய மாணவன் குகானந்தன் பாடியுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பற்றியும் அவர்களது குறும்புத்தனம், புத்திசாலித்தனம் என்பனவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய பாடலாக சிறுவர்கள் நாளைய எதிர்காலம்.. என்ற பாடல் அமைகின்றது. இந்தப் பாடலைத் தரம் 8 மாணவன் திவாகரன் எழுதியுள்ளார். தரம் 10 மாணவன் மயுரேசன் பாடியுள்ளார். விளையும் பயிர்களை முளையிலேயே கண்டுவிடலாம்.

நீங்காத நீண்ட புகழுடன் விளங்குவது இந்துக்கல்லூரி. கல்லூரியின் புகழை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்த எங்கள் படை இது இந்து படை.. பாடலைப் பழைய மாணவன் மதுசன் எழுதியுள்ளார். இதனை வீரம் தெறிக்கும் வண்ணம் ஜெயடினேஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

செம்மையான மொழியான நம் அடையாளமான தமிழ் மொழியைப் போற்றும் வண்ணம் மற்றுமொரு தமிழ்மொழி வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ள பாட லைப் பழைய மாணவன் பாலசண்முகன் எழுதியுள்ளார். இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கலாநிதி தர்ஸனன் அவர்கள். ஆசிரியர்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவ் ஆசிரியர்களின் பெருமையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்கொணரும் பாடலான எனக்கொரு ஆசிரியர் வேண்டும்.. பாடலை நா.விமலநாதன் எழுத பாடலை பாடியிருப்போர் மாணவர்களான வத்சாங்கிர சர்மா, சுஜீவன், மற்றும் டினேசன் குழுவினராகும்.

பாரதி புதுமைகளினை விரும்ப, தற்போதைய மாணவர்களும் புதுமைகள் படைப்போரே. இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற நோக்கில் மாணவன் மதீசன் அவர்களினால் எழுதப்பட்டு பாடலை ஜெகதீஸூடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்துக் கல்லூரியின் ஊக்கப்பாடலாக அமைந்துள்ள பாடல் பழைய மாணவன் ஒருவனின் எண்ணங்களில் உதித்த வார்த்தைக் கோர்வைகளினால் அழகேற்றப் பட்டுள்ளது. பழைய மாணவனும் ஆசிரியருமான நிஸாந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்தப் பாடலை விஸ்ணு பாடியுள்ளார்.

நட்பு வாழ்க்கையில் முக்கிய இடம் வகிப்பது, அதிலும் பாடசாலை கால நட்பு ரம்மியமானது. இந்த நட்பின் பெருமையை உணர்த்தும் நட்பெனும் சொந்தம் வந்ததடா.. என்ற பாடலைத் தமது நண்பர்களுக்காக அர்ப்பணித்துள்ளார் இந்த இசைத்தொகுப்பின் ஊடாக கவிஞராக அவதாரம் எடுக்கும் மாணவன் ஜனோதீபன்.

பாடலை அழகுற பாடி பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களான பிரசாந்தன் மற்றும் தர்சனன். கல்லூரியின் துடுப்பாட்ட அணி சாதிப்பதற்கென படைக்கப்பட்ட மற்றொரு அவதாரம். இவர்களுக் கென உருவாக்கப்பட்ட பாடல் ஏற்கனவே வெளிவந்த போதிலும் மீள் வடிவத்துடன் போல் வந்தால் அடிடா.. பாடலை இளசுகள் இசை அணியினர் இயற்ற ஜெகதீஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

வாழ்க்கையின் ஆரம்ப பகுதியின் பெரும்பாகத்தை எடுத்துக்கொள்வது பள்ளிப்பருவம். இந்த பருவம் மீண்டும் வருமா? மீண்டும் வராதா? என ஏங்குவோர் பலர். அவர்களுக்கான ஆறுதல் பாடலாகவும் அவர்கள் அனைவரினதும் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கும் மீண்டும் வருமா..? என்ற பாடலை மாணவன் மதீசன் எழுதிப் பாடியுள்ளார்.

இசைக்கும் படைப்பாற்றலுக்கும் வயது வரையறை இல்லை என்பதை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் யாழ் இந்துவின் மைந்தர்கள். பள்ளிப் பருவத்திலேயே மிகவும் பிரமாண்டமான இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ள இவர்கள் எதிர்காலத்தில் இசைத்துறையில் சாதிக்கவும் யாழ் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும் பல பாடல்களை வெளியிடவும் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைக் கூறி நிற்போம்.

இவர்களை வளர்த்தெடுக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சமூகத்துக்கு எமது நன்றிகளை நெஞ்சார தெரிவிக்கின்றோம். சுற்றும் உலகம் எமக்காக சுற்றும்.. சரித்திரம் நாளை நம் சாதனை பேசும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com