Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள் » யாழ்ப்பாணம் கிடக்கிற கிடையில…

இளசுகளின் தான்தோன்றித்தனம்

தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டி விபத்துச்சார்ந்த அதுவும் குடாநாட்டுப் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் விபத்துச் செய்திகளை வாசித்து பார்த்தீர்களானால், அதில் அடைப்புக்குறிக்குள் பாதிக்கப்பட்டவரின் வயதைக் குறிப்பிட்டிருப்பார்கள் அல்லவா? அந்த வயதுப் பெறுமானம் 18 தொடக்கம் 30 வரைக்கும் பரவலாகக் காணப்படும்.எங்காவது திருடர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டதாகவோ பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டதாகவோ செய்தி இருக்கிறதா, அடைப்புக்குறிக்குள் மேற்சொன்ன வயதுப் பெறுமானம் காணப்படும்.மாலை மயங்கும் நேரத்தில் குடாநாட்டு நகர்ப்புற மதுபானக் கடைகளை நோட்டம் விட்டுப் பாருங்கள். நல்லூர் திருவிழாவின்  சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் வரிசையாக நெருக்கி சைக்கிள்களை அடுக்கி வைத்திருப்பது போல சைக்கிள்களும், மோட்டார் சைக்கிள்களும் தொகையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை வைத்தே உள்ளே உள்ள திருவிழா நெருக்கடியை ஊகித்துக்கொள்ளலாம். தென்பகுதியிலிருந்து வந்த சிங்களச் சுற்றுலாப் பிரயாணிகளா இதில் ஈடுபடுகிறார்கள்? இல்லை. யாழ்ப்பாண இளைய சமுதாயமென யாரை மேலே இனங் காட்டினேமோ அவர்களே இவர்கள்.
பொது இடங்களில் கூடிநின்று தெருவில் போகின்ற பெண்களை சில்மிசம் செய்கின்ற இளைய சமுதாயத்தின் கொட்டத்தை அடக்குவதற்குப் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு யாழ். சமூகம் ஆளாகியிருக்கின்றமையையிட்டு வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கின்றது.

யுவதிகளின் போக்கு

இளைஞர்கள் இப்படியென்றால் யுவதிகள்..?

நாகரீகமான ஆடைகளுடன் ஆலயங்களில் வழிபடவருமாறு விநயமாக வேண்டுகோள் விடுக்கவேண்டிய தேவை இன்று ஆலய நிர்வாகங்களுக்கு அவசியமானதாகிப் போய்விட்டது. திரைப்படப் படக் காட்சிக்குப் பயன்படுத்திய சிக்கன
கலாசார(?) ஆடைகள் மாதிரியைப் (மொடல்) பின்பற்றி, துச்சாதனன் இன்றித் தம்மைத் தாமே துகிலுரியும் மாதர், இன்று நம்மத்தியில் பரவலாக உள்ளனர். அதுவும் தேவாலயங்களில் நிலைமை மோசமடைவதால், ஆலய பலிபீடத்தில் நின்று குருவானவர் அபாய சங்கு ஊதவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. சினிமாவின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் தாராளமாகவே கடை விரித்திருக்கிறது. திரையிலும் தொலைக்காட்சியிலும் வந்துபோன தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்கள் இப்போது கிராமப் புறங்களிலும் தெருக்களிலும் சந்திகளிலும் மறுபிறவி எடுத்திருக்கின்றனர் என்று அன்பர் ஒருவர் கூறியது ஏறக்குறைய சரியாகத்தான் இருக்கிறது. இன்றைய இளந் தலைமுறையினரின் நெற்றியில் திருநீறைக் காண்பதென்பது அபூர்வ நிகழ்வாக மாறிவிட்டது.அரசினால் தேசிய மட்டத்தில் நடத்தப்படுகின்ற தரம் 5, க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் முதலிடங்களை அலங்கரித்த காலம்போய், முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தையேனும் அலங்கரிப்பதற்கு இன்று படாதபாடு படவேண்டியிருக்கின்றது. அதுகூட இன்று எட்டாக்கனி என்கிற நிலையை எட்டியிருக்கின்றோம்.

யுத்தம் பிரசவித்துச் சென்றுள்ள அதிகளவான விதவைகள் குறித்து அதிலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பற்றிச் சமூகத்தில் தோன்றும் விழிப்புணர்வு வெறும் பூச்சியமாகவே இருக்கிறது. இவர்கள் அரசின் கைகளை எதிர்பார்க்கின்ற நிலையே நிலவுகின்றது. இவர்களின் மறுவாழ்வு குறித்து இன்றைய இளைய சமுதாயம் கிஞ்சித்தும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.
சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பத்தியில் இளைய சமுதாயத்தினர் என விளித்திருப்பது வேறு எவரையுமல்லர். உங்கள் பிள்ளைகளைத்தான், அல்லது உங்கள் சகோதர சகோதரிகளைத்தான், அல்லது..? உங்களைத்தான்.

நன்றி:உதயன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com