Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – கண்டி வீதியின் முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஹலோ ட்ரஸ்ற் எனும் தொண்டர் நிறுவனமே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சுமார் 500 பணியாளர்கள் இந்தக் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்த ஆராய்வுக்கூட்டம் முகமாலை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றது.

தற்போது ஏ – 9 வீதியின் இரண்டு பக்கமும் 200 மீற்றர் அகலத்துக்கு முதற் கட்டமாக கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. எனினும் இரண்டு மாத காலத்தினுள் முகமாலை வடக்கு பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறக்கூடியதாக இருக்கும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆராய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிவாசன், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் சத்தியசீலன், ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட வதிவிட பிரதிநிதி பார்ட்டி மற்றும் படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஹலோ ட்ரஸ்ற் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட வதிவிட பிரதிநிதி பார்ட்டி,

“கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்தாலும் கண்ணிவெடி அபாயம் முற்றாக நீங்கிவிட்டதாக கருதமுடியாது.
ஆகவே, பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளை தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இருக்க வேண்டும்.

முகமாலைப் பிரதேசம் செறிவான கண்ணிவெடிகளைக் கொண்டுள்ள இடமாக உள்ளது. இந்தப் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதில் மிகக் கடினமான உழைப்பு தேவைப்படுகிறது” என்றார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com