Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள், விளையாட்டு » பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது ஜொனியன்ஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியின் தசரிதன் சதமடித்த போதும் ஜொனியன்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து விளையாடியதால் பரபரப்பான இறுதிப் போட்டியில் பல்கலை அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக்கொண்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அவையும், கிரிக்கெட் அணியும் இணைந்து நடத்திய, அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணி பல்கலைக்கழக வெற்றிக் கிண்ணத்தை முதன்முறையாகப் பெற்றுக் கொண்டது.

பல்கலைக்கழக வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக அணியும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 49.4 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணியின் தசரிதன் சதமடித்து அசத்தினார்.

தசரிதன் 12 பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 109 ஓட்டங்களையும், செல்ரன் 69 ஓட்டங்களையும், ஜனார்த்தனன் 22 ஓட்டங்களையும், விகாஷ் 14 ஓட்டங்களையும் பல்கலைக்கழக அணி சார்பாகப் பெற்றனர். உதிரிகளாக 49 ஓட்டங்கள் அந்த அணிக்குக்கிடைத்தன.

யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ரதீஸ்குமார், லவேந்திரா ஆகியோர் தலா 3 இலக்குகளையும், அகிலன் 2 இலக்குகளையும், மயூரன் ஒரு இலக்கையும் கைப்பற்றினார்கள்.

282 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை ஜொனியன்ஸ் அணியால் எட்ட முடியாது என்றே அனைவரும் கருதினர். எனினும் இலக்கை சீரான வேகத்தில் துரத்திய ஜொனியன்ஸ் வீரர்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து துடுப் பெடுத்தாடியதால் அந்த அணி 48.2 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று வரலாற்று வெற்றியைப் படைத்தது.

ஜொனியன்ஸ் அணியின் டக்சன் (ஆட்டமிழக் காமல்) 48 ஓட்டங்களையும், லவேந்திரா 41 ஓட்டங்களையும், குமணன் 36 ஓட்டங்களையும், விதுஷன் 35 ஓட்டங்களையும், மயூரன் 32 ஓட்டங்களையும், அகிலன் 24 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். உதிரிகளாக பல்கலைக்கழக அணியால் 52 ஓட்டங்கள் அள்ளி வழங்கப்பட்டன.

பல்கலைக் கழக அணியைச் சேர்ந்த விதுபாலா 4 இலக்குகளையும் ஜனார்த்தனன், விதுரன், தசரிதன் ஆகியோர் தலா ஒரு இலக்கையும் கைப்பற்றினார்கள். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.தசரிதன் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும், தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளராக வி.விதுபாலாவும் (பல்கலை அணி), எ.அன்பு ஜன் (ஜொனியன்ஸ்) சிறந்த களத்தடுப்பாளராகவும் ப.லவேந்திரா (ஜொனி யன்ஸ்) போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com