Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள், மருத்துவம் » தாவரங்கள் தருவனவற்றால் பல பிணி நீக்கி சுகநலம் கண்டு வாழ வழிகள் பல உண்டு

Dr.சே.சிவசண்முகராஜா M.D (S),
சிரேஷ்ட விரிவுரையாளர், சித்தமருத்துவத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.

தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளைத் தெய்வீக மூலிகைகள் என்று அழைப்பது வழக்கம். கடவுள் உயிர்களைக் காப்பதுபோல இம் மூலிகைகளும் உடலுக்குப் பிணிகள் வராமல் தடுத்தும், வரும் பிணிகளை நீக்கியும் ஆரோக்கியத்தைப் பேணுகின்றன. எனவேதான், மூலிகைகளுக்குத் தெய்வத் தன்மை கொடுத்து, அவற்றை மருத்துவ தேவைக்காகப் பிடுங்கி எடுப்பதாயிருந்தால்கூட, அவற்றுக்குக்கு உரிய பூசை வழிபாடுகளைச் செய்தே பிடுங்கி எடுக்க வேண்டும் என்று சித்தர்கள் விதித்துள்ளனர். சில மூலிகைகள் இறைவனுக்கு நேரடியாக அர்ப்பணிக்கப்படுபவையாகவும், ஆலயங்களிலும், நதிக்கரை போன்ற புனிதப் பிரதேசங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்படுவனவாகவும் உள்ளன. அவற்றினால் விளையும் பயன்களும் மிக அதிகம். அவை சக்திவாய்ந்த மூலிகைகளாக விளங்குகின்றன.

வில்வை மரம்
வேறு பெயர் கூவிளம், கூவிளை.
தாவரவியற் பெயர் Aegle Marmelos
(ஈகிள் மாமெலஸ்)
குடும்பம் Rutaceae (ருற்றேசியே)
சிங்களப் பெயர் பெலி
சமஸ்கிருதப் பெயர் பில்வ
ஆங்கிலப் பெயர் Bael tree

இது மரவகுப்பைச் சேர்ந்தது. இந்து ஆலய நந்தவனங்களில் முக்கியமாகச் சிவன்கோயில்களில் இது வளர்க்கப்படுகிறது. வில்வை சிவனுக்குரிய முக்கிய விருட்சமாகும். இதில் ஆண், பெண் என்று இரண்டுவகை உண்டு. ஆண்மரம் முள் மிகுந்தும் பெண்மரம் முட்கள் குறைந்தும் காணப்படும். இவற்றைவிட கஸ்தூரி வில்வை என்றும் ஓர் இனம் உண்டு. அதில் முட்கள் கிடையாது.

வில்வை இலை முக்கூட்டிலையாகும். அது மூன்று சிற்றிலைகளைக் கொண்டது. மூன்று இலைகளும் மும்மூர்த்திகளைக் குறிப்பதாகவும், சிவனின் முக் கண்களைக் குறிப்பதாகவும், முக்குணங்களைக் குறிப்பதாகவும் கூறுவர். சில ஐந்திலைகளுடையதாகவும் காணப்படும்.
இதன் பூக்கள் வெளிப்படையாகத் தெரியாதபடியால் பூவாமல் காய்க்கும் தாவரம் என்ற பொருளில் வனஸ்பதி என்றும் அழைக்கப்படுவதுண்டு. இதன் காய்கள் விளாம்பழத்தை ஒத்திருக்கும். உள்ளே சதை பிசின் சேர்ந்ததாகக் காணப்படும்.
வில்வை இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பட்டை என்பன மருத்துவத்தில் பயன் படுகின்றன.
இதன் இலைகளை (மூன்று இலையுள்ளதாக எடுக்க வேண்டும் என்பது விதி) 4, 5 எடுத்து 1 கோப்பை நீரில் இரவு ஊறவைத்து, தினமும் காலையில் அந்த நீரைப் பருகிவந்தால் இரைப்பை குடற்புண் எனப்படும் குன்மநோய், காலைவேளையில் காணப்படும் ஓங்காளம், வாயூறல் என்பன குணமாகும்.

வில்வை இலையுடன் கோசலம் சேர்த்து இடித்துச் சாறுபிழிந்து அதை நன்கு வடி கட்டி எடுத்து 1/2 கோப்பை அளவில் ஆறுநாள் குடித்துவர பாண்டு, சோபை வீக்கம் என்பன மாறும். இதைப் பருகும்போது உணவில் புளி சேர்க்கக் கூடாது.

வில்வை இலையைக் குடிநீர் செய்து 15  30 மி.லீ. அளவில் தினமும் 3 வேளை குடித்துவர வியர்வை உண்டாகும்.

வில்வை இளந்துளிரை வாட்டி மெல்லிய சீலையில் முடிந்து கண்ணுக்கு லேசாக ஒத்தடமிட கண் சிவப்பு எடுபடும்.

வில்வம் பழச்சதையைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் உண்டுவர மலச்சிக்கல், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு என்பன நீங்கும். குடலும் வலிமை பெறும்.

வில்வம் பழச்சதை ஒரு பங்கிற்கு இரண்டு பங்கு நீர்விட்டு நன்கு பிசைந்து, வடிகட்டி சர்க்கரை அல்லது சீனி ஒரு பங்கு சேர்த்து, காலை, மாலை சாப்பிட்டு வந் தாலும், மேற்படி மலச்சிக்கல், மூலச்சூடு முதலிய நோய் கள் நீங்கும். இதனை “”வில்வம்பழம் மணப்பாகு” என்று அழைப்பர்.

வில்வம் பழச்சதைக்குப் போதிய நீர் விட்டு நன்கு அவித்து, அதை நன்கு பிசைந்து எடுத்துத் தலைக்குத் தேய்த்து முழுகிவர பேன், பொடுகு, தலைப்புண், தலைதுர்நாற்றம் என்பன நீங்குவதுடன் கண்ணுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

வில்வம் பிஞ்சைச் சிறு துண்டுகளாக வெட்டி 8 கோப்பை தண்ணீர் விட்டு, ஒரு கோப்பையாக வற்றக்காய்ச்சி வயிற்றோட்டம், சீதபேதி, உஷ்ணபேதி, இரத்தக் கழிச்சல், ஆசனக்கடுப்பு என்பவற்றுக்குக் கொடுத்து வர அவை மாறும்.

வில்வை வேர்ப்பட்டையைச் சிறு துண்டுகளாக வெட்டி முற்கூறியவாறு குடிநீர் செய்து மூட்டுவாதம், கை, கால் விறைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்குக் கொடுக்கலாம்.
வில்வம் பிஞ்சைச் சிறுதுண்டுகளாக வெட்டி, வெய்யிலில் காயவிட்டு, எடுத்தும் இடித்தும் பொடி செய்து வைத்துக் கொண்டு, சிறுவர்களுக்கு ஏற்படும் கழிச்சல், சீதபேதி, குருதிக் கழிச்சல், வயிற்றுளைவு போன்றவற்றுக்கு 1/2  1 கிராம் அளவிலும், பெரியவர்களுக்கு 2  4 கிராம் அளவிலும் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.
தசமூலம் என்ற ஐந்துவகை வேர்கள் மற்றும் தாவ ரங்கள் சேர்ந்த மருந்துகளில் தசமூலக் குவாதம், தச மூல அரிஷ்டம் என்பன தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனையுடன் அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.

அரச மரம்
வேறு பெயர்  அஸ்வத்தம், அரணி, பிப்பிலம்.
தாவரவியற்பெயர்  Ficus religiosa  (ஃபைகசு  ரிலிஜியோசா)
குடும்பம்  Morceae (மோரேசியே)
சிங்களப் பெயர்  போகவர
சமஸ்கிருதப் பெயர்  பிப்பல, அஸ்வத்த.
ஆங்கிலப் பெயர்  Peepul tree

மரங்களுக்கு அரசன் போலக் கம்பீரமாக நிமிர்ந்து வளர்வதால் அரசு என்றழைக்கப்படுகிறது. இலங்கையில் தமிழராலும், சிங்களவராலும் தெய்வீக மரமாகப் போற்றி வணங்கப்படும் ஒரு மரமாக இது உள்ளது. முற்காலத்தில் யாகம் செய்யும்போது இதன் கட்டைகள் ஒன்றுடன் ஒன்று உரோஞ்சித் தீயை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்டதால் அரணி என்றும் இதற்குப் பெயர். அரசமரத்தில் மும்மூர்த்தி களும் வாசம் செய்கின்றனர். திருமணத்தின்போது மும்மூர்த்திகளின் பிரசன்னத்தை எடுத்துக்காட்டவே அரசங்கிளை நடப்படுகிறது. அரசு பெரு மரவகுப்புக்குரியது. தனி இலைகள். ஈட்டி வடிவானவை. சித்திரை, வைகாசியில் இளந்துளிர்கள் காணப்படும். ஆனி, ஆவணியில் பூக்கும்.
இதன் இலை, வித்து, பட்டை, வேர் என்பன மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் இலைக் கொழுந்து உடல் வன்மையைக் கொடுப்பதுடன் சூலகத்துண்டாகும் கோளாறுகளைப் போக்கிச் சூலுண்டாகச் செய்ய வல்லது.
இதன் இலைக் கொழுந்தைப் பாலில் அவித்து சர்க் கரை சேர்த்துச் சாப்பிடக் காய்ச்சல், சூலகக் கோளாறுகள் நீங்கும்.

விதையைப் பொடி செய்து உண்டுவர  மலச்சிக்கல் தீரும்.

பட்டையைப் பொடி செய்து தோற் புண்கள் மீது தூவிவர அவை மாறும்.

பட்டையை அவித்துப் புண்களைக் கழுவலாம். வாய்ப்புண்ணுக்குப் பட்டை அவித்த நீரால் கொப்புளித்து வர மாறும்.

அரசம்பட்டை, அத்திப்பட்டை, ஆலம்பட்டை, இத்திப்பட்டை, நாவற்பட்டை ஆகிய ஐந்தையும் பஞ்ச துவர்ப்பதிகள் என்பர். இவற்றைக் குடிநீர் செய்து காலை, மாலை குடித்துவர வயிற்றோட்டம் மாறும். இக் குடிநீரால் புண்களைக் கழுவி வரப் புண்கள் மாறும். முக்கியமாக நீர்வடியும் புண்களை இவற்றால் கழுவலாம்.

அரசமரத்தைக் குற்றுவதனால் உண்டாகும் பாலைக் காலில் உண்டாகும் பித்த வெடிப்புக்குத் தடவிவர அது குணமாகும்.

பண்டைக் காலந்தொட்டு இன்றுவரை குழந்தைப் பேறல்லாதவர்கள் குறிப்பாகப் பெண்கள், அரசமரத் தைச் சுற்றி வழிபடும் வழக்கம் காணப்படுகிறது. “”அரச மரத்தைச் சுற்றி விட்டு அடி வயிற்றைத் தொட் டுப் பார்தாளாம்” என்று ஒரு பழமொழியும் உண்டு.

சித்திரை, வைகாசி மாதங்களில் அரசமரம் இளந் தளிர்களுடையதாக இருக்கும் போது அத் தளிர்களி லிருந்து வெளியாகும் சிலவாயுக்கள் குளித்து ஈரவஸ் திரத்துடன் அசரமரத்தைச் சுற்றி (108தடவை என்பது நீண்டநேரம் அரசமரத்தின் கீழ் நிற்பதற்கு வாய்பாக அமைகிறது) வழிபடும் பெண் களின் சூழலகங் களைத் தூண்டி (அவற்றிலுள்ள ஓமோன்களை) சூலகக்கோளாறுகளை நீக்கி, சூழ் கொள்ள (கருத்தரிக்க) உதவுவதாக நம்பப்படுகிறது.

மேலும், அரச மரவழிபாடானது (அரச மரத்தின் கீழ் நீண்ட நேரம் நிற்பதால் அதிலிருந்து உண்டாகும் காற்றினால்  வயிற்றுநோய், அபஸ்மாரம், விரணம், மனப்பயம் போன்ற பல உடல், உள வியாதி கள் மாறும் என்று முன்னோர் நம்பினர். அரசமரத்தைக் காலை வேளையில் வழிபடுவதே நன்று.

அரசமர வழிபாட்டை ஊக்கு விக்குமுகமாகவே அரச மரத்தின் கீழ் பிள்ளையார், சூலம் என்ப வற்றை ஸ்தாபித்துள்ளனர் போலும்.
சனிக்கிழமைகளில் அரசமரத் தைத் தொட்டு வழிபடக் கூடாது என்றும் ஒரு விதியுள்ளது.

நன்றி: உதயன் பத்திரிகை

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com