Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » செல்போனில் விழுந்து உடல்கள் கலந்து வயிற்றில் வளர்ந்த கருவே

விழியில் விழுந்து இதயம் கனிந்து உயிரில் கலந்த உறவே…’ என்பது வைரமுத்துவின் வைரமான வரிகள். காதல் என்ற பதத்திற்கு மிகச் சிறந்த வரைவிலக்கணமாக மேற்சொன்ன வரிகளைக் குறிப்பிடலாம்.

காதலின் புனிதத் தன்மையை அதன் தாற்பரியத்தை நிலைத்தன்மையை பறை சாற்றும் சிறந்த வரிகளாக இவை மிளிர்கின்றன. தற்போதைய சூழமைவில் எமது பிரதேசத்தில் நடந்தேறும் காதல் கதைகளை நோக்கினால் வைரமுத்துவின் வரிகளில் சிறிய மாற்றம் செய்து ‘செல்போனில் விழுந்து உடல்கள் கலந்து வயிற்றில் வளர்ந்த கருவே…’ என்று மாற்றிப் பாடினால் சாலவும் பொருத்தமானதே.

குடாநாட்டில் அண்மைக் காலமாக நடந்தேறுகின்ற பாலியல் வக்கிரகங்கள், கலாசாரச் சீரழிவுகள் பற்றி சிந்திக்கும் போது இவ் வரிகள்தான் என் மனதில் கருக்கொள்கின்றன. அண்மையில் நடந்த ஒரு சம்பவம் இங்கு பதிவுசெய்யப்படுகின்றது. யாழ்பாணம் நகரில் இருந்து சற்றுத் தொலைவிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதி, இரவு 7.00 மணி இருக்கும்.

அன்றைய தினம் பூரணை தினம் என்பதால் நிலவின் ஒளி இருளை விழுங்கி அப்பகுதியை பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது. அப் பகுதியில் சற்றே ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி செல்போனில் உரையாடியபடி அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கிறாள். தோளில் கைப்பை தொங்கியது.

பார்ப்பதற்கு நவநாகரிகமாகத் தோன்றினாலும் தோளில் தொங்கிய கைப்பையை வைத்து ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறாள் என்பதை மட்டும் ஊகிக்கமுடிந்தது.

தற்போது தனியார் நிறுவனங்களின் பெருக்கம் யாழ் குடா நாட்டை உலுப்பிக் கொண்டிருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் பல தமது வேலை நேரத்தை அதிகரித்துள்ளமையால் சில வேளை வேலைமுடிந்து வீடு செல்வதற்காக உறவினர்களையோ அல்லது வேறு ஏதோ அவசரத் தேவை கருதி செல்போனில் உரையாடுகிறாள் என்கிறது மனம். சிறிது நேரம் கழிந்திருக்கும்.

அந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி ‘விர்’ என விரைந்துவந்தது ஒரு ‘ஹையஸ் வான்’. அந்த வானிலிருந்து இரு இளைஞர்கள் இறங்கினார்கள். வந்து இறங்கிய இளைஞர்களில் ஒருவன் அந்த யுவதியிடம், “என்னைத் தெரியுமா?” என்றான். இன்னொருவன் தம்முடன் கொண்டு வந்த ஐஸ்கிறீமை அந்த யுவதியிடம் நீட்டினான்.

மூவரும் ஒன்றாக இருந்து ஐஸ்கிறீம் உண்டனர். சிறிது நேரத்தின் பின்னர் அந்த யுவதி ஹையஸ் வானுக்குள் ஏறினாள். அந்த இளைஞர்களும் கூடவே ஏறினார்கள். திடீரென அவ்விடத்திலிருந்து வேகமாக புறப்பட்டு கண்களிலிருந்து மறைந்தது அந்த வான். இதற்குப் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி இங்கு சொல்லத் தேவையில்லை.

யாழ் குடாநாட்டில் இவ்வாறான பாலியல் வக்கிர செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது செல்பேசிக் கலாசாரம் தலைதூக்கியுள்ளதால் பல ரகங்களில் விதவிதமான செல்பேசிகள் குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கின்றன. முன்னர் செல்பேசியைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் தொழில்புரிவோர் மற்றும் செல்வந்த வர்க்கத்தினராகவே இருந்தனர்.

ஆனால், இன்று நிலமை இன்று முற்றிலும் மாறிவிட்டது. பாடசாலை செல்லும் 10 வயது மாணவனிலிருந்து வயோதிபர் வரை செல்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இதிலும் விசித்திரம் என்னவென்றால் வயோதிபர்கள் கூட செல்பேசியைத் திறம்படக் கையாள்வதில் அதீத திறமையை வெளிப்படுத்துகின்றனர் என்றால் பாருங்களேன். எனது நண்பன் ஒருவன் கூறிய கருத்து இங்கு சிந்திக்கற்பாலது.

சுமார் 60 வயது முதியவர் தனது செல்பேசிக்குள் ஆபாசப்படம் வைத்துப் பார்த்ததை தனது கண்களால் நேரில் பார்த்தாகக் கூறினான். முன்னரெல்லாம் ஆபாசப்படங்கள் பார்ப்பதென்றால் இளைஞர்கள் படும்பாடு பெரும்பாடு. அதைப்பற்றி இங்கு விபரித்தால் பெரும் பத்தி நீளும். ஆனால், தற்போது கைக்குள்ளேயே ‘எல்லாம்’ வந்துவிட்டதால் ஆபாசப்படங்களையும் செல்பேசிக்குள் கொண்டுவந் துவிட்டார்கள்.

தாம் பார்த்து ரசித்தாலும் பரவாயில்லை. தமது நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கென புளூரூத், எம்.எம்.எஸ். மூலம் பரப்பிவிடுகின்றனர். தான் கெட்டது மாத்திரமின்றி ஊரையே கெடுத்து விடுகின்றனர். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பழமொழிக்கு இணங்க சிலர் வாழத் தலைப்படுவதனால் தான் இன்றும் இவ்வுலகு இருக்கின்றது போலும்.

ஆண் நண்பர்களிடையே இத்தகைய ஆபாசக் காட்சிகளை அனுப்பினால் பரவாயில்லை. தமது பெண் நண்பிகளுக்கும் அனுப்பி மகிழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. நவீன வடிவில் பல கம்பனிகளின் பெயர்களில் செல்லிடப் பேசிகள் இன்று பெண்களின் கரங்களிலும் தவழ்கின்றன. பாடசாலை செல்லும் மாணவிகள் முதல் வேலைக்குச் செல்வோர் வரை வயது வேறுபாடின்றி இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செல்பேசி என்பது தூரத்தில் இருப்பவர்களுடன், அதுவும் அவசர தேவை கருதி உரையாடுவதற்குப் பயன்படுத்தப்படுவது. ஆனால், இப்போது உரையாடுவது என்ற எல்லைக்கப்பால் இப்படியான ஆபாசக் காட்சிகளை பதிவேற்றம் செய்து, அவற்றை வயது வேறுபாடின்றி ரசிக்கும் மனோபாவம் எம் சமூகத்தில் தலைதூக்கியுள்ளது.

இதனால் தான் இன்றை இளம் சந்ததி அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறது. ஆக இன்றைய இளைஞர் யுவதிகளிடையே அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக கைத்தொலைபேசிப் பாவனையும் ஒன்றாகிவிட்டதன் பின்னணியில் அதன் தாக்கம் எமது சமூகத்தின் கலாசார வேரையே சிதைக்கும் அளவுக்கு புற்றுநோய் போல் பரவிவருகிறது.

செல்போன்களின் மூலம் உண்டாகும் காதல் உறவு, பெண்களின் கர்ப்பப்பை வரை ஊடுருவிச் சென்று கருவை நிரப்பிவிட்டுத் தப்பித்துச்செல்லும் தன்மை வாய்ந்தது. இதனால் தான், வேண்டத்தகாத கர்ப்பங்களும் சட்ட விரோத கருக்கலைப்புக்களும் வீதியோர சிசுக்களும் என பட்டியல் நீள்வதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பனவாக இச்செயல்பாடு வழிவகுக்கின்றது.

எனவே தான், கட்டுக்கடங்காமல் திசைமாறிச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய இளம் சந்ததியை திருத்தி, சரியான வழியில் அவர்கள் பயணிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com