Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, நிகழ்வுகள், பிரபலமானவர்கள் » சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நினைவு தினம்

தங்கம்மா அப்பாக்குட்டி (7 ஜனவரி, 1925 – ஜூன் 15, 2008) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளர். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தார். “சிவத்தமிழ்செல்வி” என்று அழைக்கப்பட்டு வந்தார்.

ஜனவரி 7, 1925 இல் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார்.

1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.

தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 1976 இல் ஓய்வு பெற்றார்.

யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. “பண்டிதை” என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் துவக்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.

பிற்காலத்தில் இவர் “சிவத்தமிழ்ச் செல்வி”, மற்றும் “துர்க்கா புரந்தரி” என அழைக்கப்பட்டார். தங்கம்மா அப்பாக்குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.

ஆலய வளாகத்தில் அனாதைச் சிறுமிகளுக்கென துர்க்கா மகளிர் இல்லம் என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவி சேவையாற்றி வந்தார். அத்துடன், ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதிபர்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து தொண்டாற்றினார்.

திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி சில வாரங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். 16 ஜூன் மாலை 4:00 மணிக்கு தெல்லிப்பழை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com