Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள், மருத்துவம் » குரலிசை மூலம் நோய்களைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை – யாழ்.ஆஸ்பத்திரியில்

இன்றைய நவீன உலகிலே விஞ்ஞானம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கேற்றாற் போல விதம் விதமான நோய்களும் பல்வேறு பெயர்களில் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள், வறியநாடுகள் என்ற பேதமில்லாமல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பன இந்த நோய்கள்தான்.

எல்லா நாடுகளுமே தமது மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கென ஆண்டுதோறும் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்குகின்றன. ஏராளமான மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன. புதுவகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் வித்தியாசமான பெயர்களில் நோய்களும் தோற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன.சித்த, ஆயுள்வேத மருந்துருகளின் பாவனை புறமொதுக்கப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பாவனையால் பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதைவிட தரமற்ற மருந்துகளின் பாதிப்பு வேறு. இதனால் மருந்துகளின்றி நோய்களைக் குணமாக்க முடியாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு மெல்லிய ஒளிக்கீற்றாக ஒரு விடையும் கிடைத்துள்ளது. அதுதான், இசை மருத்துவம். ஆனால் இது எமக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்யும். அதற்கு வலுவான காரணமும் உண்டு. இந்த இசை மருத்துவம் பற்றிய செய்தி எமது நாட்டிலே எப்போதுமே கேட்டிராத ஒன்று. ஆனால் நோர்வே நாட்டில் தோன்றிய இந்த மருத்துவ முறையானது ஏனைய ஸ்கன்டிநேவியநாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா எனப் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் வியாபித்து வருகின்றது. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, வலிதரும் ஊசி இல்லை, நோய்க்குரிய மருத்துவ இசையைக் கேட்டாலே போதும் நோய் பயந்தோடிவிடும். இந்த ஆச்சரியம் தரும் மருத்துவ முறையை இந்த நாட்டிலே முதன் முதலாக அறிமுகம் செய்த பெருமையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பெறுகின்றது.

இந்த வைத்தியமுறையை வழங்குவதற்கு இந்த நாட்டிலேயே தகுதி பெற்ற ஒருவர் என்ற பெருமையையும் இந்த யாழ்.மண்ணின் மைந்தர் ஒருவரே பெறுகின்றார். அவர் வேறு யாருமல்லர். இசைத்துறையிலே பல உயரிய பட்டங்களைப் பெற்றுள்ள 34 வயதேயான டாக்டர் சிறீரங்கநாதன் தர்ஷனன் தான் அவர். உதயன் பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டபோது இசை மருத்துவம் பற்றி இதுவரை தெரிந்திராத பல அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர் சிறீ ரங்கநாதன் தர்ஷனன் தமது சொந்த வாழ்க்கை வரலாறு குறித்தும் எமக்கெல்லாம் புதியதொரு விடயமான குரலிசை மூலமான வைத்தியமுறை குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தரப்பட்டுகின்றன. நான் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அப்பா சிறீரங்கநாதன். அம்மா செல்வகௌரி. எனது ஆரம்பக் கல்வியைக் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்கல்லூரி  ஆகியவற்றிலும் பயின்றேன். நான் யாழ். இந்துக்கல்லூரியில் ஜி.சீ.ஈ உயர்தரத்தில் உயிரியல் பாடப்பிரிவில்தான் முதலில் கற்று வந்தேன். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு இசையின் மீது அடங்காத ஆர்வம் இருந்ததால், உயிரியல் பிரிவிலிருந்து கலைப் பிரிவுக்கு மாறி எனது கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் பயின்று முடித்தேன். நான் ஒரு மருத்துவராக வேண்டுமென விரும்பிய எனது பெற்றோரும், உறவினர்களும் எனது இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் நான் எனது முடிவை மாற்றவில்லை. இப்போது எனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஒத்தவாறு ஒரு மருத்துவராகவும் நான் தற்போது ஏற்றம் பெற்றிருப்பது எனது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

அளவெட்டியூர் சிற்றம்பலம் சிவஞானராஜா  அவர்களிடம் குருகுலவாசம் செய்து இசையைப் பயின்றேன். அவரும் நான் இசைத் துறையில் தடம் பதிக்கச் சிறப்பான பயிற்சிகளை எனக்கு வழங்கினார். அவரை எனது நெஞ்சம் எப்போதுமே மறக்காது.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசையில் B.Music  முதல் வகுப்பில் பட்டம் பெற்றேன். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலே M.Music முதல் வகுப்பிலும் M.Phil Music   முதல் வகுப்பு சிறப்பு நிலைத் தேர்ச்சியும் பெற்றேன். இறுதியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலே எனது டாக்டர் பட்டமான PhD Music இணைப் பெற்றேன். பின்னர் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து இசைத்துறையில்  B.Music பட்டத்தினைப் பெற்றேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் M. Music,  M.Phil Music ஆகிய பட்டங்களை முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றேன்.
இதன் பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் (Ph.D) பெறும் பொருட்டு இணைந்து எனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தேன். நான் ஒரு மருத்துவராக உருவாக வேண்டுமென்ற எனது பெற்றோரின் கனவை நனவாக்கும் பொருட்டு எதிர்காலத்தில் ஒரு மருத்துவராகவும் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற தொலைநோக்குடன் “குரலிசையின் மருத்துவக் குணங்கள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்தேன். இதற்குக் குரலிசை மூலம்  நோய்களுக்கு மருத்துவம் செய்யலாம் என்ற எனது அசையாத நம்பிக்கை ஒரு காரணமாகும். எனது ஆராய்ச்சிகளுக்கான வசதிகள் இந்தியாவில் போதியளவு இல்லாமையினால் இங்கிலாந்து சென்று அதனைத் தொடர்ந்தேன். அங்குM.Phil, Ph.D  பட்டப்படிப்பை நான் ஆங்கில மொழியில் தொடர்ந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது. வேற்றுமொழி பேசுவோர் இசை மருத்துவத்தைக் கற்பதற்கு எம்மை நாடிவரும் போது அதற்கு ஆங்கில மொழி பேருதவியாக இருக்குமென நான் நம்பியதே இதற்கு முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்த மருத்துவ முறைபற்றிக் கேள்விப்படும் தென்னிலங்கை மக்களும், வேறு நாட்டு மக்களும் எம்மை நிச்சயம் நாடி வருவர். மேலும் நான் 1999 இல் யாழ். பல்கலைக் கழக நுண்கலைப் பீடத்தின் குரலிசை உதவி விரிவுரையாளராக இணைந்து இன்று முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கு மேலதிகமாக யாழ். போதனா வைத்தியசாலையில் வாரத்தில் இரு நாள்கள் (செவ்வாய், வெள்ளி) பி.ப.2 மணி தொடக்கம் 4 மணிவரை மனநல மருத்துவப் பிரிவில் வைத்தியராக சென்ற மாதம் தொடக்கம் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதற்கான அனுமதியை யாழ்.வைத்தியசாலை மனநல மருத்துவப் பிரிவின் வைத்திய நிபுணர் டாக்டர் சிவயோகன் யாழ்.பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொடுத்தார். அவர் எனக்கு வேண்டிய ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்கி வருகின்றார்.

உளவளம்

பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. உளநலம்
பாதிப்படைந்தவர்களையும், உளநோய்க்கு ஆளானவர்களையும் தனித் தனியாகத் தேர்ந்தெடுத்து பொருத்தமான இசையினைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தலாம் அல்லது ஒருவருக்கு இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
நான் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். எல்லா இசையும் மருத்துவ இசையல்ல. மருத்துவ இசையானது ஆளுக்கு ஆள், சமுதாயத்திற்குச் சமுதாயம், நாட்டுக்கு நாடு, சூழல், மதம், தொழில், மொழி, கல்வியறிவு, ஆண் பெண் வித்தியாசம் என வேறுபடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மருத்துவ இசையைத் தயாரித்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு வைத்தியர் எப்படி நோயாளியொருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தபின் வைத்தியத்தை ஆரம்பிக்கின்றாரோ, அதேபோன்று இசை மருத்து வரும் ஒரு நோயாளி யின் முழு வாழ்க்கைக் குறிப்பையும் நுட்பமான முறையில் பதிவு செய்து சகல விவரங்களையும் சேகரித்துக் கொண்ட பின்னரே ஒவ்வொருவருக்கும் ஏற்ற முறையில் தனித்தனியான மருத்துவ இசையைத் தயாரிக்கின்றார். இதன் பின்னர் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட  ஒலிப்பதிவு செய்யப்பட்ட மருத்துவ இசை வழங்கப்படும். இதனை ஏனைய வைத்தியர்கள் வழங்கும் மருந்து வகைகளை வேளைக்கு வேளை அருந்துவது போல நோயாளர்கள் கேட்க வேண்டும். இதனை ஒழுங்காக வைத்தியர் குறிப்பிடும் காலம்வரை கடைப்பிடிப்பதன் மூலம் நோயினின்றும் குணமடையலாம்.

மேலும் இந்த இசை மருத்துவம் பக்கவிளைவுகள் ஏதும் விளைவிக்காததோடு, செலவு குறைவானதாகவும், இலகுவானதாகவும் இருப்பதுடன், உலகின் எந்த மூலையில் உள்ள எவருக்கும் இணையதள மூலமாகச் சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ள சிறப்பினைப் பெற்றுள்ளது.

செவ்வி:
ராஜராஜன்
(வளரும்)

நன்றி: உதயன் பத்திரிகை

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com