Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, கைத்தொழில் » கண்ணாடி நாரிழையில் தளபாட உற்பத்தி நிலையம்

துரித வளர்ச்சி கண்டு வரும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் புதியபுதிய கண்டுபிடிப்புக்கள் உருவாகிய வண்ணமே உள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பல கருவிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவது அனைவரும் அறிந்த விடயம். இப்படியாக உருவாக்கப்பட்ட பொருள்களின் சந்தைவாய்ப்பை அதிகரிப்பதற்கு முக்கிய தடைகற்களாக அமைந்தது அப்பொருள்களின் உற்பத்திச் செலவாகும். இப்பொருள்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்த காரணத்தினால் அவற்றின் விலைகளும் அதிகமாகக் காணப்பட்டன. இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்கும் இப்பொருள்கள் சென்றடையவில்லை. இதனை உணர்ந்த மனிதன் இப்பிரச்சினைக்கு ஏதாவது மாற்றுவழி தேட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆம் அந்த சூழலில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பிளாஸ்ரிக். எனவே பிளாஸ்ரிக்கின் உதவியுடன் மனிதன் தனது உற்பத்திப் பொருள்களை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வந்தான்.

“அப்பாடா நிம்மதி” என்று இருந்த மனிதனுக்கு மெல்லமெல்லத் தலையிடி தொடங்கியது. ஆம் சூழல் மாசுப்படுத்துவதில் பிரதான பங்கு வகிக்கும் காரணியாக அந்தப் பிளாஸ்ரிக் மாறியது.ஏனெனில் இது இலகுவில் பிரிகையடையும் பதார்த்தமல்ல. ஆனால் மக்கள் மத்தியில் பெருமளவு புழக்கத்திலுள்ள இப்பிளாஸ்ரிக்கை அதன் பாவனையை ஈடுசெய்யக்கூடிய பொருளாகவும் சூழலை மாசுபடுத்தாத பொருளாகவும் ஏதாவது மாற்றுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு மீண்டும் மனிதன் தள்ளப்பட்டுள்ளான். அந்த வகையிலே இப்பிளாஸ்ரிக்கிற்கு ஈடுசெய்யும் மாற்றுப் பொருளாக மாறி வருவதுதான் கண்ணாடி நாரிழை. எனினும் பிளாஸ்ரிக்கின் பாவனையைக் கைவிடுவதற்கு மனிதன் தயாராக இருப்பதாகப் புலப்படவில்லை. ஆனால் சில நாடுகள் பொலித்தீன் பாவனை போன்றவற்றைத் தடை செய்துள்ளமையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இப்பிளாஸ்ரிக்கால் செய்யப்படுகின்ற பொருள்களில் பலவற்றை கண்ணாடி நாரிழை மூலம் செய்து காட்ட முடியும் என்று கூறுகிறார். யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த முத்துசாமி திருநாவுக்கரசு (வயது 50) என்பவர். கடந்த மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வடமாகாண உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியில் இவரை நாம் சந்தித்தோம். அங்கு அவர் தனது பொருளாதார வசதிக்கு இயலுமான அளவு ஏனையோரிடம் கடன்பட்டு மிகவும் தரமான பார்ப்பவர்களைக் கவரக்கூடிய வகையில் தளபாடங்கள், கதவுகள், குளியல் தொட்டி என்பனவற்றைக் காட்சிப்படுத்தி இருந்தார்.

காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சிறுவயதில் காரைநகர் தோப்புக்காட்டில் அமைந்திருந்த “சீநோர்” நிறுவனத்தில் கண்ணாடி நாரிழை தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொண்டதாக கூறுகின்றார். பின்னர் 1980 ஆம் ஆண்டில் பஹரேன் நாட்டுக்கு சென்ற சமயம் இது தொடர்பான மேலும் பல நுணுக்கங்களை அறிந்ததாகத் தெரிவித்தார். இவ்வுற்பத்தி பற்றி விரிவாக விளங்கிக் கொள்ளும் முகமாக இவரது வீட்டுக்குச் சென்ற நாம் உங்களது இந்தக் கண்ணாடி நாரிழை மூலமான பொருள்களின் உற்பத்தி பற்றி விளக்குவீர்களா என வினவினோம். எங்களை இன்முகத்துடன் அவரும் அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். அவரது வீட்டுக்கு முன்பகுதியிலுள்ள பெரிய கோழிக்கூட்டைத் தனது தொழில் நிலையமாகப் பயன்படுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அமைக்கப்பட்டுள்ள அச்சுக்களில் மேற்படி பொருள்கள் செய்யப்பட்டுக் காயவைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தினார். பின்னர் இதை எவ்வாறு செய்வது எனக் கேட்டோம்.

மிகவும் உற்சாகமாக செய்முறைகளைப் பற்றி விளக்கத் தொடங்கினார். முதலில் குறிப்பிட்ட பொருளை செய்யமுதல் அதற்கான அச்சுகள் உருவாக்கி இருப்போம். உதாரணமாகக் கதவாக இருக்கலாம், அல்லது குளியல் தொட்டியாக இருக்கலாம். இந்த அச்சை முதலில் சுத்தம் செய்யும் முகமாக “கொம்பவுன்ட்” எனப்படும் பதார்த்தத்தைப் பூசி சுத்தம் செய்வோம். பின்னர் “”வக்ஸ்” எனப்படும் பதார்த்தத்தை அந்த அச்சுப் பூராகவும் பூசுவோம். காரணம் நாம் செய்யப்போகும் பொருள் இலகுவாக அச்சிலிருந்து கழர்வதற்கு. அதாவது வீட்டில் தோசை சுடும்போது தோசை இலகுவாகத் தட்டிலிருந்து கழற்றுவதற்கு எண்ணெய் பூசுவோமல்லவா அதுபோலத்தான் என நகைச்சுவையாகப் பதிலளித்தார். அதன் பின்னர் எமக்கு விரும்பிய வர்ணத்தில் அப்பொருள் அமைய வேண்டுமெனின் “” பிக்மன்ட்” எனும் நிறப்பதார்த்தத்தை ” ஜெல்கோட்” எனப்படும் திரவத்தில் சேர்த்துக் கலப்போம். பின்னர் தூரிகை மூலம் இத்திரவக் கலவையை அச்சில் பூசிய பின்னர் அதன்மேல் கண்ணாடி நாரிழையை விரித்து விடுவோம்.

இதில் முக்கியமான ஒன்று என்னவெனில் இந்தக் கண்ணாடி நாரிழை மூன்று அளவுகளில் உண்டு. அதை 300 அளவுடையது, 450 அளவுடையது, 600 அளவுடையது எனப் பாகுபடுத்தலாம்.
அதாவது நாம் செய்கின்ற பொருளின் பாவனை அளவைப் பொறுத்து தடிப்பு கூடிய அல்லது குறைந்த அளவுள்ள கண்ணாடி நாரிழையைப் பயன்படுத்துவோம்.
இவ்வாறாக கண்ணாடி நாரிழையைப் பரவிய பின்னர் “”ரெசின்” எனப்படுகின்ற பதார்த்தத்தை அதன்மேல் பூசி சிறிய “”றோல்” மூலம் கண்ணாடி நாரிழையைச் சேப் செய்வோம்.
பின்னர் ஒளியின் ஊடுறுவலைத் தடுப்பதற்காக கறுப்புநிறக் கலவை சேர்க்கப்படும். அதன் பின் நன்றாகக் காயவைத்து அப்பொருளைப் பெறமுடியும். இவ்வாறு செய்முறைப்படிகளை மிகத் தெளிவாக விளக்கினார்.

அண்மையில் யாழ்.மத்திய கல்லூரியில் நடை பெற்ற உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் கண்காட் சியில் உங்கள் பொருள்களுக்கு எவ்வாறு வரவேற்பு இருந்ததெனக்  கூறமுடியுமா என வினாவினோம்.
நிச்சயமாக இது எமக்கொரு வரப்பிரசாதமாகவே அமைந்தது என்றுதான் கூறவேண்டும். எனது பொருள்களைப் பலர் பார்வையிட்டு சென்றனர். அதில் அதிகமானோர் தமக்கு இப்பொருள்களை செய்து தருமாறு கேட்டுள்ளனர். எனினும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக சில நாள்களுக்கு முன்னர்தான் “”உதயன்” பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
இதனால் குறித்தளவு பொருள்களையே ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருந்த பொருள்களையே காட்சிப்படுத்த முடிந்தது. நேரகாலத்துடனே அறிந்திருப்பேனாயின் இன்னும் புதிய புதிய பொருள்களைக் காட்சிப்படுத்த முயற்சி எடுத்திருப்பேன் என்றார் சற்றுக் கவலையுடன்.
வாசகர்களுக்கு ஏதாவது கூற ஆசைப்படுகிறீர்களா என வினாவினோம்.
எனது பொருளை விற்பனைக்காக யாழ்.நகரில் ஒரு கடையில் வைத்திருந்தபோது வேறு தேவைக்காக அக்கடைக்கு சென்றிருந்தேன். அப்போது அக்கடைக்கு வந்த இரு தம்பதியரில் குறித்த பெண் எனது பொருளைக்காட்டி “இது நன்றாக இருக்கிறது வாங்கினால் என்ன” என்று தனது கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் “இது இஞ்ச செய்தது வேண்டாமப்பா” எனக் கூறினார். இது நான் சந்தித்த ஒரு சிறிய சம்பவம். இது போல எமது மக்கள் எமது உள்ளூர் உற்பத்திகளை வெறுக்கும் மனப்பாங்கைக் கைவிட்டு எமது உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இதற்கான மூலப் பொருள்கள் வெளியிடத்திலிருந்து பெறப்படினும் இப்பொருள்களை உள்ளூரிலே உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.
இப்பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்புக்களை உள்ளூரிலேயே உருவாக்கிக் கொடுக்க முடியும்.
தற்போது எமது பிரதேசத்தில் தலையெடுத்துவரும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இது போன்ற உள்ளூர் உற்பத்திகளைப் பெருக்கிக் கொள்வது அவசியமாகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் நடத்தப்பட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக நடத்தப்பட்ட கண்காட்சியில் மாவட்ட மட்டத்தில் இப்பொருள்கள் முதலிடத்தைப் பெற்றதோடு ஜனாதிபதி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளமை  இங்கு  குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அதுமட்டுமல்லாது கடந்த 2004 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணச் சிறுகைத்தொழில்  கண்காட்சியிலும் இவருக்கான விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற மஹா விஸ்ணு நிறுவன உரிமையாளர் தனக்கு வழங்கிய பெரும் ஊக்குவிப்பின் மூலமே இப்பொருள்களில் சிலவற்றை உருவாக்கி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்த முடிந்ததாகவும்,
இங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருள்களை பலர் பார்வையிட்டுச் சென்றுள்ளதோடு இப்பொருள்களை செய்வதற்கான ஓடர் தருவதாகக் கூறிச் சென்றுள்ளதாகவும் கூறுகிறார்.
அத்துடன் தான் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக, இப்பொருள்களைக் கொள்வனவு செய்யும் விற்பனை  நிலையங்கள், இப்பொருள்களை விற்றபிறகே அதற்கான பணத்தைத் தருவதாகவும் இதனால் அடுத்த பொருள்களை உற்பத்தி செய்வதில் கால தாமத்தை எதிர்கொள்ள நேருவதாகவும் தெரிவிக்கின்றார்.
பெரும்பாலானவர்களுக்கு கண்ணாடி நாரிழை என்றதுமே மீன்பிடிப் படகுகள்தான் நினைவுக்கு வரும். அதாவது மீன்பிடிப் படகுகள் செய்வதற்கும் பயன்படும் பொருள்கள்  நீரிற்குப் பழுதாகாமல் தாக்குப் பிடிக்கும் தன்மை வாய்ந்தவை.
அதேபோல பிளாஸ்ரிக் பொருள்களும் நீர், வளி போன்றவற்றால் உக்கும் தன்மை அற்றவை. எனி னும் உதாரணமாக இப்பிளாஸ்ரிக்கால் தயாரிக்கப் பட்ட கதிரையை எடுத்தால் இது தவறுதலாக உடையுமாயின் அதை உடனே குப்பையில் வீசுவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது.
ஆனால் இக்கண்ணாடி நாரிழையால் செய்யப் பட்ட மேசையாக இருக்கலாம் அல்லது கதவாக இருக்கலாம் இலகுவில் உடையும் தன்மை இல்லாத வையானாலும் உடையும் பட்சத்தில் அதை மீளப் பழைய நிலைக்கு மாற்ற  உடைந்த இடமே தெரி யாது ஒட்டமுடியும் என்கிறார் இவர். நிச்சயமாக இது போன்ற முயற்சிகள் உரிய முறையில் தட்டிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுதல் அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் எமது பகுதியில் இது போன்ற உற்பத்திகளை வளர்த்து தனியே சிறு உற்பத்திகளோடு மட்டும் நின்றுவிடாது இது போன்ற நவீன உற்பத்திகளை எமது குடாநாட்டில் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

நன்றி: உதயன் பத்திரிகை

முயற்சியாளர் திரு.முத்துசாமி திருநாவுக்கரசு அவர்களிற்கு யாழ்பாணத்தின் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் இவ்வாறான முயற்சியாளர் பலர் யாழ்பாணத்தில் நிறையவே உள்ளார்கள், இவர்களை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கு எமக்கு அறிவியுங்கள் அல்லது பேட்டிகளை அனுப்பி வையுங்கள்.

1 Comment

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com