Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள், யாழ்.செய்திகள் » எரிபொருள் நிலையங்களின் மகுட வாசகம் “பெற்றோல் முடிந்துவிட்டது’

யுத்தம் நடந்த காலம் – ஏ9 பாதை பூட்டப்பட்டி ருந்த வேளை, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 350 ரூபாய், சவர்க்காரம் நூற்று ஐம்பது ரூபாய், ஒரு லீற்றர் பெற்றோல் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு இப்படியயல்லாம் விலை கொடுத்துச் சீவியம் நடத்தியவர்கள் நாங்கள்.

யுத்த காலத்தில் அத்தகைய துன்பங்களை அனுபவித்தமை தகும். ஆனால், இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. ஏ-9 பயணத்திற்குக் குறையில்லை. இருந்தும் சில பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலம் யாழ்.குடா நாட்டில் இருப்பது அபத்தமாகும். அதில் குறிப்பாகப் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் தட்டுப்பாடு மகா துன்பம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் தங் களின் பெறுமதியான ஆவணமாக ஒரு பதா கையை வைத்திருக்கின்றன. அதில் ‘பெற்றோல் முடிந்துவிட்டது’ என எழுதப்பட்டுள்ளது. சர்வ சாதாரணமாக அந்தப் பதாகையைப் பெற்றோல் நிரப்பும் பம்பியில் தொங்கவிடுவர். இதைப் பார்த்த மாணவன் ஒருவன் தனது ஆசிரியரிடம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மகுட வாசகம் என்ன தெரியுமா சேர்? என்று கேட்டுள்ளான்.

ஆசிரியர் அதிர்ந்து போனார். எரிபொருள் நிலையங்களுக்கும் மகுட வாசகம் உண்டா? எனக்குத் தெரியாதே! என்ன மகுட வாசகம் என்று ஆசிரியர் வினவ, அதற்கு ‘பெற்றோல் முடிந்துவிட்டது’ என்பது தான் அந்த மகுட வாசகம் என்று மாணவன் பதில் பகர்ந்தான்.

அந்தளவிற்கு எங்கள் எரிபொருள் நிலையங்களின் இருப்பு உள்ளது. யாழ்.குடாநாட்டு மக்கள் எரிபொருள் தட்டுப் பாட்டை நீண்டகாலமாக அனுபவித்தவர்கள் என்பது உண்மைதான். அதற்காகத் தொடர்ந்தும் அந்தத் துன்பத்தை அனுபவித்தாக வேண்டுமா? என்ன? பொதுவில் எரிபொருள் நிலையங்கள் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்க வேண்டும். அப்போதுதான் வாகனப் போக்குவரத்துச் சீராக இயங்கும். இருந்தும் எங்கள் மண்ணில் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்குதல் என்ற பேச்சுக்கு இடமில்லை. குறைந்தது இரவு பத்து மணியேனும் எரிபொருள் நிலையங்கள் இயங் கினால் அது உத்தமம்.

அதைவிட மிகவும் முக்கியம் எரிபொருள் நிலையங்கள் கையிருப்பை – தாங்கிருப்பைப் பேணுவதாகும். யாழ்.குடாநாடு வாகனப் போக்கு வரத்தில் உச்சம் அடைந்திருக்கும் இந்நேரத்தில் பெற்றோல் முடிந்துவிட்டது என்ற பதாகையைத் தொங்கவிடுவது எங்களிடம் இருக்கக்கூடிய பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துவதாகவே அமையும்.

தனிப்பட்ட வர்த்தகர்கள் பெற்றோலை விற்பனை செய்ய முடியாத சட்டக் கட்டுப்பாடுகள் இருக்கும்போது, இலங்கையின் பெற்றோலி யக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகாரம் பெற்ற எரிபொருள் விற்பனை முகவர்கள் ‘முடிந்து விட்டது’ என்று அறிவித்தல் போடுகிறார்கள் எனில் எங்கோ கோளாறு இருக்கின்றது என் பதே பொருளாகும். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

நன்றி: வலம்புரி

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com