Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » உண்ணாமல் சேர்த்த தங்கத்தால் நிம்மதியை தொலைக்கும் யாழ் மக்கள்

இனிமையாக விடிய வேண்டிய காலைப்பொழுது, ஒரு குடும்பத்துக்கு அபசகுனமாக விடிந்தது. காலையில் எழும்பியதும் மனைவியிடம் சொல்லாமல் எங்கும் செல்லாத கணவன், அன்றையதினம் வழமைக்கு மாறாமல் சென்றுவிடுகிறான். பதற்றம் அடைகிறாள் மனைவி. திருடர்களுக்குப் பயந்து ஒவ்வொரு இரவிலும் தாலிக்கொடியை இடம் மாற்றி மாற்றி வைப்பாளாம் மனைவி.

அது கணவன், குழந்தைகளுக்குக் கூட தெரியாதாம். முதல் நாள் இரவு கணவனின் சைக்கிள் சீட் கவருக்குள் தாலிக்கொடியை ஒழித்து வைத்திருக்கிறாள். அதை அறியாத கணவன் தூங்கும் மனைவியை கஷ்டப்படுத்த விரும்பாமல் அதிகாலையில் வேலையாக வெளியில் சென்று திரும்புகிறான். பதற்றத்தோடு சீட் கவருக்குள் கையை வைக்கிறாள் மனைவி. பட்ட காலில் படும் என்று இதைத்தான் சொல்லுவார்களோ! இது ஒரு உதாரணம்.

யாழ்ப்பாணத்தில் இப்படி எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக? ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடந்தால் பெண் வீட்டில் ஆண் (மணமகன்) வந்து வாழ்வதும், பெண் குழந்தையுடன் அவளின் தாய், தந்தை வாழ்வதும் யாழ்ப்பாணத்துத் தேச வழமையாகும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தின் பின்னர் தங்களுக்கான சேமிப்பை சேமிக்க ஆரம்பிப்பார்கள்.

பொதுவாக அவர்களின் திருமணத்தில் விழுந்த பணத்தில் (மொய்ப்பணம்) இருந்து சேபிப்பு ஆரம்பிக்கும். இப்பொதும் “எங்கண்ட கலியாணத்தில் விழுந்த 300 ரூபா காசிலைதான் இந்தப் பூட்டுக்காப்பு வாங்கினனான்” எனச் சொல்லும் ஆட்கள் அங்கு உண்டு. பொதுவாக எதாவது பணம் அல்லது காசு கிடைக்கும்போது தங்க நகைகளை வாங்கும் பழக்கம் அங்கு உண்டு என்பதுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் சேமிப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள்.

ஒரு மனைவியானவள் தனது பொழுதுபோக்காக வளர்த்த கோழியில் இருந்து கிடைத்த வருவாயில் கூட தன் சின்ன மகளுக்கு ஒரு தூக்கணம் ( ஜிமிக்கி) வாங்குவாள். ஆடு வளர்த்தால் அக் குடும்பமே ஆட்டுப்பால் குடிப்பதோடு, மிகுதியாகக் கிடைக்கும் கொஞ்சம் ஆட்டுப்பாலை விற்றால் மாதம் தவறாமல் கிடைக்கும் பணம் ஒரு புறம். குட்டி ஆடுக்கிடா வளர்ந்தால் கிடைக்கும் பணம் மறுபுறம்.

கோழி வித்து, குஞ்சு வித்து, மாடு வித்து, கண்டு வித்து கிடைத்த காசு எல்லாத்தையும் குட்டிக் குட்டி நகைகளாக மாற்றும் வித்தை தெரிந்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள். எத்தனை வலி, துன்பம், பசி, பட்டினி, சாவு, பிரிவு, வேதனை, ஆற்றாமை என்பவற்றை சந்தித்தாலும் அதில் இருந்து மீளும் மனோதிடம் கொண்டவர்கள் அவர்கள். குடும்பத் தலைவனை யுத்தத்தில் பலி கொடுத்த விதவைப் பெண் கூட “போன மாதம்தான் பெட்டைக்குக் கலியாணம் முடிஞ்சது. மாப்பிளை வாத்தியார்.

30 பவுண் போட்டு செஞ்சு குடுத்தனாங்கள்” என்று கூறுவது அங்கு சர்வசாதாரணம். அதற்காக அந்தக் குடும்பத்தில் செல்வம் கொழிப்பதாக அர்த்தம் இல்லை. “தின்னாமல் கொள்ளாமல் சேர்ப்பது” என்பது பொருள் ஆகும். மேலும் யுத்த காலத்தில் தங்களின் உழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற சேமிப்பை வங்கிகளில் சேமிப்பதற்கும் அவர்களுக்கு வழி கிடைக்கவில்லை. வங்கிக் கணக்குகளைப் பார்த்து கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டிய துர்பாக்கியநிலை ஒரு புறம்.

பணம் தேவைப்படும்போது எடுக்க வழியில்லாத அவலநிலை மறுபுறம். இதனால் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் அங்கு இன்னும் அதிகரித்தது என்றால் அது மிகையில்லை. ஆனால் தற்போதைய யாழ் நிலைவரம் என்ன? இரவு, பகலாக கஷ்டப்பட்டு தேடிய தங்க நகைகளை பாதுகாப்பாக வைப்பது எப்படி எனத் தெரியாமல் நீண்ட இரவுகளை தூக்கம் இன்றி தொலைக்கிறார்கள் அவர்கள்.

ஒருவர் தலைநகரில் வங்கிப்பெட்டகம் ஒன்றைப் பெறுவதற்காக விண்ணப்பப் பத்திரம் ஒன்றை நிரப்பிக் கொடுத்தாராம். அதை வாங்கிய வங்கி நிர்வாகத்தினர் “கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்திருக்கக் கூடாத? யுத்தம் நிறைவுக்கு வந்திட்டுது. நாங்கள் ஊருக்குப் போகிறோம் என அவசர அவசரமாக வங்கி லொக்கர்களை மூடிச் சென்றவர்கள் எல்லாம் பின்னங்கால் பிடரியில்பட ஓடி வந்து அவற்றை மீள வாங்கிக் கொண்டார்கள்.” எனக் கூறினராம்.

யாழ்ப்பாணத்தில் இப்போது எல்லாம் “நேற்று அங்கை 80 பவுண் போட்டுதாம். இங்கை 60 பவுண் எடுத்துட்டாங்களாம்.” என்பது வழமையாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் தங்கள் வங்கிக் கிளைகளை முந்திக்கொண்டு திறப்பதில் காட்டும் ஆர்வம், பாதுகாப்புப் பெட்டகங்களை தருவதில் காட்டுவதில்லை என தங்க நகைகளைத் தொலைத்தவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

பலத்த பாதுகாப்பு, கடுமையான சோதனை, விழிப்புக் குழுக்கள் என பல கட்டுக்களையும் உடைத்து விட்டு எப்படி அவர்களால் கொள்ளயிடமுடிகிறது? இதற்கு என்னதான் முடிவு?

நன்றி:தீவகன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com