Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள், மருத்துவம் » இசையால் பிணிகளை நலிய வைக்கும் மருந்துவம்

இசை மருத்துவம் தொடர்பாக டாக்டர் .சி.தர்ஷனன் வழங்கிய செவ்வியின் முதல் பகுதி சென்ற வாரம் பிரசுரமானது. அதன் இறுதிப் பகுதி இங்கு பிரசுரமாகின்றது.

தற்போது இந்த இசை மருத்துவ சிகிச்சையானது முதற் கட்டமாக மனநலம் சம்பந்தப்பட்டவர் களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது. மனநலம் சம்பந்தமான பிரச்சினைகள் தற்போதைய காலகட்டத்தில் ஏதோவொரு  விதத்தில் மக்களிடம் இயல்பாகவே காணப்படுகின்றன.

மன நோயின் அறிகுறிகள்

ஒருவருக்கு மனம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளன என்பதை அவர் வெளிப்படுத்தும் பின்வரும் செயற்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைதல், ஆத்திரப்படுதல், மற்றவர்களிடம் பொறாமை கொள்ளுதல்,  தமக்கு வழங்கப்பட்ட வேலைகளை ஒழுங்காக முடிப்பதில் பதட்டம் அடைதல், அடிக்கடி எந்த விஷயத்திற்கும் பயம் கொள்ளுதல், தேவையற்ற கவலையுடன் காணப்படுதல், எப்போதும் தனிமையில் யோசனைகளில் ஆழ்ந்திருத்தல், மற்றவர்களுடன் இயல்பாகப் பழகாமல் விடுதல், தமது தலைமைத்துவத்துக்குப் பணியாத தன்மை,  கிடைத்த தலைமைத்துவத்தை   தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் சர்வாதிகாரமாகப் பாவித்தல், தொடர்ந்து வாழவிருப்பமில்லாத எண்ணங்களை வெளிப்படுத்தல், வேலை செய்ய விருப்பமில்லாத தன்மை என்பவற்றைப் பிரதானமாகக் கொள்ளலாம். இத்தகைய மனம் தொடர்பான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த இசை மருத்துவ சிகிச்சையினை வழங்குவதன் மூலமாக அவர்களை மனநலக் குறைபாடுகள் இல்லாதவர்களாக மாற்றிவிட முடியும். மேலும் இத்தகைய குறைபாடுகள் இல்லாதவர்கள் உரிய இசையினைக் கேட்பதன் மூலமாக எதிர்காலத்தில் இக்குறைபாடுகளால் பாதிக்கப்படுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தற்போது மனநலம் தொடர்பான ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக இசை ஒலிப்பதிவு கள் தயாரிக்கப்பட்டுச் சிகிச்சை யளிக்கப்படுகின்றது. இதில் கணிசமான அளவு வெற்றிகண்ட பின்னர் உள்ளம் சம்பந்தமான உடல் நோய்களுக்குச் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இப்போது பலர் ஞாபகமறதி, தூக்கமின்மை போன்றவற்றால் பெரும் அவதியுறுகின்றார்கள். சிலர் தூக்கத்தை வரவழைப்பதற்காக தூக்க மாத்திரைகளையும் உபயோ கித்து வருகின்றனர். இது காலப் போக்கில் பல பக்க விளைவுக ளுக்குக் காரணமாக அமைந்து விடலாம். ஆனால் உரிய இசை மருத்துவம் மூலம் இவற்றைக் குணப்படுத்திவிட முடியும்.
மேலும் இந்த நோய்கள் வருமுன்னர் உரிய மருத்துவ இசையை கேட்பதன் மூலமாக இவற்றை வராமலேயே தடுக்க முடியும். ஆகவே இந்த நோய்கள் வரும்வரை காத்திருக்காமல் முற்கூட்டியே இவற்றைத் தடுப்பதற்கு மருத்துவ இசையை நாடவேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
முன்னர் குறிப்பிட்டது போன்று உளவியல் சார்ந்த உடல் நோய்களுக்கு அடுத்த கட்டமாக இசை மருத்துவம் வழங்கப்படவிருக்கிறது. அல்சர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குடற்புண், ஆஸ்த்துமா, மாரடைப்பு, உயர்இரத்தஅழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை இந்த இசை மருத்துவத்தின் மூலமாக கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கலாமென ஆராய்ச்சிகள் மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளன.

நோயாளியை இனம் காணுதல்

ஆங்கில வைத்திய முறைகளுக்கும், இசை மருத்துவமுறைகளுக்கும்  நிறையவே வேறுபாடுகள் காணப்படுகின்றன. நோயின் குணம் குறிகளைக் கண்டறிந்து அவற்றைச் சுகப்படுத்துவதற்கான மருந்து வகைகளை வழங்குவதே ஆங்கில வைத்திய முறைகளில் முதற்படியாக அமையும். ஆனால் நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்த பின்னரே இசை மருத்துவம் ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் மூலம் நோயாளி நோயின் மூலகாரணத்திலிருந்து விடுபட்டுக் குணமடைய முடிகின்றது.
எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடும் இசையானது ஏதோவொரு வகையில் தொடர்புடையதாக உள்ளது. இந்த இசையானது கர்நாடக இசையாகவோ,நாட்டுப்புற இசையாகவோ, மேலைத்தேய இசையாகவோ ஏன் சினிமா இசையாகவோ கூட இருக்கலாம். இசை மனிதர்களோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. இசை மருத்துவத்தைப் பெறுவதற்கு வருபவர்கள் இசை ஞானம் உள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைத்  தெரியாதவர்களுக்கும் சிகிச்சையை  ஆரம்பிக்கலாம்.
இந்தச் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன்னர் நோயாளரை இனம் காண்பது அவசியமானதாகும். இதற்கு இரண்டு முறைகள் எம்மால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
1) திறந்த முறை
2) மூடிய முறை
திறந்த முறையென்பது வெளிப்படையாக இருக்கும். இதில் அநேகமானோர் ஒத்துழைக்கக் கூச்சப்படுவர். தம்மை இனம் காட்டவும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.
மூடிய முறையென்பது சிகிச்சை பெற வந்தவருக்குத் தெரியாமல் விவரங்களைச் சேகரிப்பதனைக் குறிக்கும். எதை அறிவதற்கு மருத்துவர் முனைகிறார் என்பதை அறியாமல் இயல்பாகவே தங்களைப் பற்றிய விவரங்களைத் தருவார்கள். இதனைப் பகுப்பாய்வு செய்த பின்னர் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

பொருத்தமான இசையைத்தேர்வு செய்தல்
உலக இசை முறைகள் யாவும் ஏழு ஸ்வரங்களை உள்ளடக்கிய தான ஒரு ஒருமைப் பாட்டினைக் கொண்டு விளங்குகின்றன. அந்த ஏழு ஸ்வரங்கள் ஸ,ரி,க,ம,ப,த,நி என்பனவாகும். இந்த ஸ்வரங்களில் ஸ,ப தவிர மீதி ஐந்து ஸ்வரங்களும் ஒவ்வொன்றும் இரண்டு வெவ்வேறு வகைகளாகப் பிரிந்து பத்தாக உருவாகின்றன. இந்தப் பத்தும் ஸ,ப ஆகிய இரண்டு ஸ்வர நிலைகளை எடுத்துக் கொள்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அதிர்வெண் அளவுகள் உள்ளன.

அதிர்வெண்களுக்கும், நோய்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்வதன் மூலமே இந்த மருத்துவ முறையானது செயற்படு கின்றது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளிலுள்ள வேறுபாடுகள் காரணமாக அவர்களுக்குத் தேவையான மருத்துவ இசையில் இருக்கக் கூடிய அதிர்வெண்களும் வித்தியாசப்படுகின்றன. இந்த மருத்துவ முறையில் ஒவ்வொருவரையும் குணப்படுத்தக் கூடிய மருத்துவ இசையில் இருக்க வேண்டிய அதிர்வு எண்கள் கண்டு பிடிக்கப்படும். அந்தக் கண்டு பிடிக்கப்பட்ட அதிர்வெண்கள் அனைத்தையும் இணைத்து ஒரு இராகம் உருவாக்கப்படும். அந்த இராகத்தில் அந்த நோயாளிக்குத் தேவையான மருத்துவ இசை அமைக்கப்படும்.
ஒரு பாடலானது தனியே இராகத்தில் மட்டுமே தங்கியிருப்பதில்லை சுருதி, லயம், தாளம், பாட்டின் வேகம், பாடல் அமைந்துள்ள மொழி, ஆண் குரலிலா பெண் குரலிலா அந்தப் பாடல் அமைந்திருக்கின்றது என்பது; திரைப்படப்பாடலாயின் அது எந்தத் திரைப்படத்தில் வந்திருக்கின்றது, எந்தப் பாடகரால் பாடப்பட்டுள்ளது, கதாநாயகன் யார், கதாநாயகி யார் என்கின்ற அனைத்து விடயங்களும் இந்த மருத்துவ இசையை உருவாக்குகின்ற போது கவனத்தில்  கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிக்கு ஏற்ற சிகிச்சை  வழங்குவது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இசை மருத்துவத் துறையை ஊக்குவித்தல்
இந்தியாவில் இசை மருத்துவத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டிலுள்ள  பல்கலைக் கழகங்கள் இசை மருத்துவத்திலே கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியதோடு நிதியும் வழங்கியுள்ளது. இதன் மூலமாக அதிகளவு இசை மருத்து வர்கள் உருவாகும் வாய்ப்புக்கள் ஏற்படுவதோடு இந்த மருத்துவத்து றையும் அபிவிருத்தி பெறும்.
நோர்வே நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இசை மருத்துவம் வளர்ந்த நாடுகளில் வேகமாகப் பிரபல்யம் பெற்று வருகின்றது. அந்த நாடுகளின் வைத்தியசாலைகளில் இசை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஏனைய மருத்துவர்கள் போன்றே வேதனம், வசதிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நிலை வளர்ச்சியடையாத நாடுகளில் காணப்படவில்லை. இதற்கு புதிய விடயங்களை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனப் பக்குவம், மூடநம்பிக்கை, பிடித்த கொள்கைகளிலிருந்து விலகாத தன்மை, திறந்த மனம் இல்லாமை ஆகியனவற்றைக் காரணங்களாகக் கூறலாம். இந்நிலையைப் போக்கி இந்த மக்களும் இதனை ஏற்றுக் கொள்ளுவதற்கு அரசுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும். அப்போதுதான் இந்த மருத்துவத்தைப்பற்றிய செய்திகள் மக்களை வேகமாகச் சென்றடையும் ஏதுநிலை தோன்றும்.
நான் பிறந்த மண்ணிலேயே வாழ்ந்து இந்த  மக்களுக்குச் சேவையாற்ற  விரும்புகின்றேன். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறையில் மருத்துவ இசையை ஒரு அலகாக அறிமுகம் செய்யலாம். இதற்கான முயற்சிகளில் நான் ஈடுபடுவேன். பின்னர் படிப்படியாக இசை மருத்துவத்திலேயே பட்டப்படிப்பை ஆரம்பித்து கலாநிதிக்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் உருவாக்கப்படும் மருத்துவர்கள் அரச, தனியார் மருத்துவ மனைகளில் நியமனம் பெறும் வாய்ப்புக்கள் ஏற்படும். மேலும் இவர்கள் மாற்று வலுவுடையோருக்கான பாடசாலைகள், முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நான் இசைத்துறையிலே உயர்ந்த இடத்தை வகிப்பதற்கு இசை ஆசான்கள் பலர் உறுதுணையாக நின்று உதவியிருக்கின்றனர். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். எனது  கட.ஈ பட்டத்திற்கான ஆய்வு நெறியாளராக இருந்து வழிகாட்டிய திருவையாறு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.உமாமகேஸ்வரி அவர்களுக்கு இந்த வேளையிலே எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இசை மருத்துவம் பற்றிய செய்திகள் மக்களைச் சென்றடையாததால் அவர்கள் இது தொடர்பான விழிப்புணர்வு இன்றிக் காணப்படுவது கவலை தருகின்றது.  இந்த நிலையை மாற்றியமைக்க ஊடகங்கள் உதவவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

செவ்வி: ராஜராஜன்
நன்றி: உதயன் பத்திரிகை

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com