Subscribe:Posts Comments

You Are Here: Home » மருத்துவம், யாழ்.செய்திகள் » பிரான்ஸ் வைத்தியர் குழு பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் பணியை நிறுத்துகிறது

பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திய சேவைகளை வழங்கி வந்த பிரான்ஸ் வைத்தியக்குழு எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் தனது சேவைகள் அனைத்தையும் நிறுத்திக்கொள்கிறது.

கடந்த 1987ஆம் ஆண்டு மே இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பித்த ஒப்பரேஷன் லிப ரேஷன் என்ற இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ் வைத்தியக்குழு பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை வைத்திய சேவையை முதன்முதலாக ஆரம்பித்தது.

தொடர்ந்து சத்திரசிகிச்சை வைத்திய சேவையுடன் மகப்பேறு, பொதுவைத்தியம், அவசர சிகிச்சைப்பிரிவு ஆகிய வைத்திய சேவைகளையும் ஆரம்பித்தது.

அத்துடன் வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்ட போது அவ்வப்போது மருந்து வகைளையும் வழங்கியதுடன் வைத்திய சாலையில் சில அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டது.

1987, 1988 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது இடையில் சிக்கிப் படுகாயமடைந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களுக்குப் பிரான்ஸ் வைத்தியக் குழு அளித்த வைத்திய சேவை மிக உச்சமானது.

1987 முதல் சேவை புரியும் பிரான்ஸ் வைத்தியக்குழு சமாதானம் நிலவிய 2003, 2004 ஆம் ஆண்டு காலப்பகுதி தவிர ஏனைய காலங்களில் தமது சேவைகளை வழங்கி வந்தது.

எதிர்வரும் டிசெம்பர் மாதத் துடன் தமது சேவைகளை முடிவுக்குக் கொண்டு வருமுகமாக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்திசாலையில் பிரான்ஸ் வைத்தியக்குழு தனது சேவைகளை மெல்ல மெல்லக்குறைத்து வருகின்றது.

இந்த வைத்தியக் குழு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே சேவைகளை வழங்கி வருகின்றது.
தற்போது பிரான்ஸ் வைத்தியக் குழுவினரின் வைத்திய சேவைகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலைகளில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.

யுத்தத்துக்குப் பின்னர் மீளக் குடியமர்ந்த வன்னிப் பிரதேச மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்கும் முகமாக பிரான்ஸ் வைத்தியக் குழுவின் றொலன்ட் பிரிவு, கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையிலும் பிரான்ஸ் வைத்தியக் குழுவின் பிரான்ஸ் பிரிவு, முல்லைத்தீவு வைத்திய சாலையிலும் தமது சேவைகளை வழங்கிவருவதோடு அந்தச்சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com