Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, சிறப்புக் கட்டுரைகள் » நம்பிக்கையூட்டிய மிருதங்க அரங்கேற்றம்

நல்லை க.கண்ணதாசன்(BFA)

22.04.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் யாழ் வீரசிங்கம் மண்டபம் இசை வெள்ளத்தில் நிறைந்திருந்தது. அது ஒரு மிருதங்க அரங்கேற்ற நிகழ்வு. முகத்தில் புன்னகை தவழ எந்தவித பதட்டமும் இன்றி அனுபவமிக்கதொரு மிருதங்கக் கலைஞன் போன்று தனது பிஞ்சு விரல்களினால் மிருதங்கத்தால் நாதமழை பொழிந்து கொண்டிருந்தான் பன்னிரண்டே வயதே நிரம்பிய அரங்கேற்றக் கதாநாயகனான செல்வன் சோமராஜ் நிலோத்தமன். தண்ணுமை வேந்தன் கலாபூஷணம் திரு. மா. சிதம்பரநாதன்
அவர்களின் மிருதங்க வாசிப்புப் பாணியை அப்படியே பிரதிபலித்து வாசித்த மாணவன் நிலோத்தமனின் அரங்கேற்றம் பார்வையாளர்களுக்கு இது ஒரு அரங்கேற்றம் என்பதற்கு அப்பால் ஒரு அனுபவமிக்க வித்துவான் வாசித்த கச்சேரியொன்றை இரசித்த நிறைவை உண்டாக்கி இருப்பதை அவதானிக்க முடிந்தது.

கலைப் பண்புகள் நிறைந்த சிறந்த ஆற்றுகைத்திறன் நிறைந்த தண்ணுமை வேந்தன் திரு.மா. சிதம்பரநாதன் அவர்கள் தமது அமைதியான இசைப்பணிமூலம் நல்ல தரம் மிக்கதான இளங்கலைஞர்களை உருவாக்கி அரங்கேற்றி கலையுலகினுக்கு அளிக்கை செய்து வருகின்றார். அதற்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது செல்வன் நிலோத்தமனின் அரங்கேற்றம். அத்துடன் ஏனைய அரங்கேற்றங்கள் போலல்லாது இந்த அரங்கேற்றம் ஒரு புதுமை படைத்ததாய் அமைந்திருந்தது. என்னவெனில் வாய்ப்பாட்டுக் கலைஞர் உட்பட அனைத்துக் கலைஞர்களும் இளங்கலைஞர்களாய் இருந்தனர்.

பாட்டு – நுண்கலைமாணி திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன்
வயலின் முதுதத்துவமாணி திரு. க. குகபரன்
கெஞ்சிரா இசைக்கலைமணி திரு. வ. ரமணா
கடம் நுண்கலைமாணி திரு. சி. சிவசிவா
முகர்சிங் கலாவித்தகர் திரு. க. நந்தகுமார் ஆகிய முன்னணி இளங்கலைஞர்கள் இணைந்து நிலோத்தமனின் மிருதங்க இசைக்கு மெருகு சேர்த்தனர்.

அரங்கேற்றங்களுக்குரிய வழமையான சம்பிரதாயங்களைத் தொடர்ந்து ‘தஞ்சம் என்றாலே’ என்று தொடங்கும் ஆபோஹி இராகம் – ஆதி தாளத்தில் அமைந்த பாவநாசம் சிவன் இயற்றிய வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. வர்ணத்திலேயே கச்சேரி
களைகட்டத் தொடங்கிவிட்டது. வர்ணத்தில் அமைந்திருந்த கணக்குகளை லயப்பிடிப்புடன் மிருதங்கத்தில் வாசித்தான் நிலோத்தமன். அடுத்து ‘மூலாதார மூர்த்தி’ என்று தொடங்கும் ஹம்சத்வனி இராகம் – ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனை இடம்பெற்றது. இந்த உருப்படிக்கு அழகு சேர்ப்பதாய் அமைந்திருந்தது நிலோத்தமனின் மிருதங்க வாசிப்பு. நிலோத்தமனுக்கு பெரிதும் உறுதுணையாய்
அமைந்திருந்தன ஏனைய தாளவாத்தியக் கலைஞர்களினது அரவணைப்பான வாசிப்புக்கள். அடுத்து ‘துளசிதள’ என்று தொடங்கும் மாயமாளவகௌளை இராகம் – ரூபக தாளத்தில் அமைந்த கீர்த்தனை இடம்பெற்றது. அதனை அடுத்து ‘ஸ்ரீஜாலந்தர’ என்று தொடங்கும்
கம்பீர நாட்டை இராகம் – ஆதிதாளத்தில் அமைந்த உருப்படியும் அதன்பின்பு ‘நிஜமுன்னே’ என்று ஆரம்பிக்கும் பிலஹரி இராகம் – கண்டசாப்பு தாளத்தில் அமைந்த உருப்படியும் இடம்பெற்றது. நிலோத்தமன் ஆதிதாளக் கீர்த்தனைகளுக்கு மட்டுமன்றி ரூபகம் சாப்புத்தாளக் கீர்த்தனைகளுக்கும் இனிமையுற லயம்தப்பாது மிருதங்கம் இசைத்து அவையோரினது பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டான். இன்னும் இன்னும் அனுபவம் பெறப்பெற மிக உச்சமானதொரு மிருதங்க வித்துவானாய் மிளிர்வதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அடுத்து பிரதான உருப்படி. ‘சாமகான லோலனே’ என்று தொடங்கும் ஹிந்தோள இராகம் – ஆதிதாளத்திலமைந்த உருப்படி பிரதான உருப்படியாகப் பாடப்பட்டது. குறுகிய நேரத்தினுள் ஹிந்தோள இராகத்தின் அமைப்பை கனசச்சிதமாக ஆலாபனை செய்தார் பங்கயச்செல்வி முகுந்தன். அதற்கு மிக அருமையாக ஒத்துழைத்து தனக்குரிய நேரத்தில் தனது வயலின் வாத்திய விற்பனத்துவத்தை வெளிக்காட்டினார் குகபரன். இந்த உருப்படிக்கும் மிக அருமையாக அமைதியாக மிருதங்கம் வாசித்த நிலோத்தமன் ஸ்வரம்பாடுகையில் பங்கயச்செல்வி முகுந்தன் பாடிய அத்தனை கணக்குகளையும் அப்படியே பிரதிபலித்து வாசித்து கரகோஷம் பெற்றான். எனக்கு அருகில் அமர்ந்திருந்த நல்லையாதீன ஸ்வாமிகள் ‘இத்தனை சின்ன வயதில் இத்தனை ஞாபக சக்தியா!’ என்று
பிரமித்தார்.

அடுத்து தனியாவர்த்தனம். குருநாதரினால் புகட்டப்பட்ட கணக்கு வழக்குகள் நிறைந்த கோர்வைகளை சற்றும் பிசகாமல் நல்ல தாளப்பிடிப்புடன் தாளவாத்தியக் கலைஞர்களினது பேச்சுவழக்கில் சொன்னால் ‘ஓடாமல் இழுக்காமல்’ வாசித்தான்
நிலோத்தமன். பெரியபெரிய கோர்வைகளை வாசிப்பதற்கு நிறைந்த நநெசபலயும் நல்ல ஞாபக சக்தியும் லயஞானமும் வேண்டும். அது நிலோத்தமனுக்கு நிறையவே இருக்கிறது.

தனியாவர்த்தனத்தில் கோர்வைகளை தண்ணுமைவேந்தன் அவர்கள் அமைத்திருந்தார். அத்துடன் திஸ்ரகதி கண்டகதி மிஸ்ரகதி ஆகிய மூன்று கதிகளும் ஒன்றில் இணைந்துவரும் முடிவுத் ததிங்கிணதொம்மை சச்சிதமாக வாசித்தான் நிலோத்தமன். இது மிருதங்க
மேதை தமிழ்நாடு காரைக்குடி மணி அவர்களினால் உருவாக்கப்பட்டதாகும். நல்ல லயப்பிடிப்பு இன்றி இதனை மிருதங்கத்தில் வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.

இதனை மிக அநாயாசமாக வாசித்து பாராட்டுப் பெற்றான் நிலோத்தமன். தனியாவர்த்தனத்தின்போது கெஞ்சிரா வாசித்த ரமணா கடம் வாசித்த சிவசிவா முகர்சிங் வாசித்த நந்தகுமார் ஆகியோர் தமது இளைய தம்பியை சரியாக வழிநடத்தும் பொறுப்புள்ள அண்ணன்கள் போன்று நிலோத்தமனுக்கு ஒத்தாசை புரிந்து தமது பங்கைச் சிறப்பாகச் செய்தனர்.

தனியாவர்த்தனத்தை அடுத்து ‘ராஜாஜி’ இயற்றிய ‘குறை ஒன்றும் இல்லை’ என்று தொடங்கும் இராகமாலிகையாய் ஆதிதாளத்தில் அமைந்த பாடல் ‘மயில்மீது’ என்று தொடங்கும் வாஸந்தி இராகம் ஆதிதாளத்தில் அமைந்த பாடல் கண்ட ஏகதாளம் சிவரஞ்சனி இராகத்தில் அமைந்த ‘தாதீதொம்’ என்று தொடங்கும் தில்லானா – திருப்புகழ் என்பவற்றுடன் அரங்கேற்ற நிகழ்வு இனிதே நிறiவு பெற்றது.

நல்ல ஒழுங்கமைப்பு அளவான கருத்துரைகள் கனிவான உபசரிப்பு சப்தமி கலைக் கூடம் திரு.கோ. சத்தியனின் சீரான ஒலியமைப்பு என ஒரு நல்ல நிகழ்வைக் கண்டுகளித்த திருப்தியுடன் அவையோர் வீடு திரும்பினர். அரங்கேற்ற நாயகனுக்கும் குருநாதருக்கும்
நிலோத்தமனின் பெற்றோர் திரு.திருமதி. சோமராஜ் தம்பதியினருக்கும் பாராட்டுக்கள் நிறைந்தன. எங்கு பார்த்தாலும் கலைவளமாய் நிரம்பியிருந்த பழைய யாழ்ப்பாணச்சூழல் மீண்டும் வராதா என்று ஏங்கும் பண்பு விருத்தி ஆர்வலர்களுக்கு இப்படியான நிகழ்வு மிகுந்த மகிழ்வையும் நம்பிக்கையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

1 Comment

  1. நல்லை கண்ணதாசன் அவர்கள் கூறியது போல், இந்த அரங்கேற்றம் நிலோத்தமனின் திறமையையும், குருவின் ஆழு says:

    நல்லை கண்ணதாசன் அவர்கள் கூறியது போல், இந்த அரங்கேற்றம் நிலோத்தமனின் திறமையையும், குருவின் ஆழுமையையும் நன்கு கட்டியம் கூறியது என்பது திண்ணம்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com